முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று (நவ.8) காலமானார்.
திருப்பதியில் தனது மகனின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்த அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், அங்கேயே அவர் உயிரிழந்தார்.
நாளை காலை அவரது உடல் கோவை கொண்டு வரப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. அவருடைய மறைவுக்குப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அதிமுகவின் செய்தித் தொடர்பாளர்களில் ஒருவராக இருந்தவர் முன்னாள் எம்.எல்.ஏ கோவை செல்வராஜ். பின்னர் அக்கட்சியில் இருந்து விலகி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியின் கோவை மாவட்டச் செயலாளராக இருந்தார். பின்னர், அந்த அணியிலிருந்தும் விலகிய கோவை செல்வராஜ், கடந்த 2022ஆம் ஆண்டு முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
தொடக்கத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்த கோவை செல்வராஜ் நீண்ட காலம் காங்கிரஸ் கட்சியில் இருந்தவர். கடந்த1991–96இல் மறைந்த முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சி காலகட்டத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏவாக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.