கட்சிக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்த காரணத்தால்தான் வெற்றி வாய்ப்பை இழந்தோம். அதே நிலை நீடித்தால் மீண்டும் எதிர்க்கட்சியாக இருக்க வேண்டியதுதான் என்று திருச்சியில் நடந்த அதிமுக கள ஆய்வு கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணி தொண்டர்கள் மத்தியில் பேசினார். அதே கூட்டத்தில் கட்சிக்குள் ஆபரேசன் செய்ய தேவை இருக்கும் என்றால் அதையும் நிச்சயம் செய்வோம் என்று முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசினார்.
திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக கள ஆய்வு குழு கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள மண்டபத்தில் நடைபெற்றது. மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, கோகுல இந்திரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கோகுல இந்திரா பேசுகையில், “வசதி படைத்த ஒரு அமைச்சர் திருச்சியில் இருந்துவருகிறார். அவரை தேர்தலில் வீழ்த்துவதற்கு பூத் வாரியாக பணியாற்ற வேண்டும். வாக்குச்சாவடி கூட்டம் என்றால் ஒவ்வொரு பூத்தில் இருந்தும் குறைந்தபட்சம் 10நபர்களை அழைத்துவந்து பங்கேற்கச் செய்ய வேண்டும். தேர்தல் நேரத்தில் கருத்துவேறுபாடு இல்லாமல் பெண்களையும் பங்கெடுக்கச்செய்ய வேண்டும். கூட்டணி குறித்து மூத்த நிர்வாகிகள் பார்த்து கொள்வார்கள்.
பூத் அளவில் அனைவரிடம் கம்யூனிகேஷன் சரியாக இருக்க வேண்டும். அனைத்து அதிமுக கூட்டங்களுக்கும் பெண்களை அதிக அளவில் அழைத்து வர வேண்டும். பெண்கள் ஆர்வமுடன் இருக்கிறார்கள். எந்த கருத்து வேறுபாடும் இல்லாமல் பெண்களை தேர்தல் நேரத்தில் அதிகம் பயன்படுத்த வேண்டும். யாரையும் புறக்கணிக்காமல் வெற்றி என்ற பாதையில் பயணிக்க வேண்டும்” என்றார்.
அடுத்து தங்கமணி பேசுகையில் ... “இந்த கூட்டத்திற்கு வந்தவர்கள் பொறுமை இல்லாமல், கவனம் இல்லாமல் இருப்பது வருத்தமாக இருக்கிறது. நாம் கருத்து வேறுபாடுகளை மறந்து பணியாற்ற வேண்டும். கருத்து வேறுபாடு இருந்த காரணத்தால்தான் வெற்றி வாய்ப்பை இழந்தோம். மீண்டும் அதே போல் இருந்தால் தொடர்ந்து எதிர்க்கட்சியாக இருக்க வேண்டியதுதான். யார் வேட்பாளராக வந்தாலும் அவர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும். யாரை வேட்பாளராக அறிவித்தாலும் அவருக்கு எதிராக ஒரு குரூப் பணியாற்றுகின்றீர்கள். அப்படி இருந்தால் மீண்டும் திமுக தான் ஆட்சி அமைக்கும்.
திருச்சியில் அதிமுக தொடர் தோல்விகளை சந்தித்துவருகிறது. அதிமுக கோட்டையாக இருந்த திருச்சியில் சங்கடங்கள் வர யார் காரணம்? சரியாக பணியாற்றினால், எதிரிகள் யாராக இருந்தாலும் நம்மால் வெற்றி பெறமுடியும். கருத்து வேறுபாடுகளை களைய வேண்டும்.
உறுப்பினர்கள் அட்டையை பிழையில்லாமல் வழங்க வேண்டும். பூத் கமிட்டியை எந்த வித சங்கடங்களும் இல்லாமல் அமைக்க வேண்டும். பூத் வாரியாக கிளைகள் அமைக்க வேண்டும். வாக்குச்சாவடி முகவர்கள் சரியாக பணியாற்ற வேண்டும். வாக்காளர் பட்டியலில் இருந்து இறந்தவர்களின் பெயர்களை பயன்படுத்தி எதிரணியினர் கள்ள ஓட்டு போட வாய்ப்புள்ளது. இதனை தடுக்கும் வகையில் இறந்தவர்களின் பெயர்களை பட்டியலில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும்” என்றார்.
இதனை தொடர்ந்து திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில்... “மேடையில் ஒரு கூட்டம் நடத்தினால் கீழே ஒரு கூட்டம் தனியாக நடத்துகின்றீர்கள். வேட்பாளரை நியமித்தால் அவரை பிடிக்கவில்லை என கூறும் மன நிலை மாற வேண்டும். யாரை வேட்பாளராக நிறுத்தினாலும் அவருக்காக பணியாற்ற வேண்டும். திருச்சி மாவட்டத்தில் சந்து பொந்தெல்லாம் கோஷ்டியாக இருக்கிறது. அதை சரி செய்ய வேண்டும்.
கட்சிக்குள் இருக்கும் குழப்பம், கருத்து வேறுபாடுகளை பேசி தீர்ப்போம். முடியவில்லை என்றால் அதை பொதுச்செயலாளரிடம் அந்த விவகாரத்தை கொண்டு செல்வோம். தேவைப்பட்டால் ஆப்ரேசன் செய்வோம். ஆப்ரேசன் செய்யவில்லை என்றால் வைத்தியம் செய்ய முடியாது. எல்லோரும் கைத்தட்டுவதை பார்த்தால் ஆப்ரேசன் தேவை என்று தான் தோன்றுகிறது.
ஜெயலலிதா மறைந்த பின் சசிகலா முதலமைச்சராக்க எல்லோரும் முடிவு செய்தோம். அப்போது அவருக்கு எதிராக தீர்ப்பு வந்தது. அவர் சிறை சென்றார். சசிகலா முதலமைச்சராக்க கூடாது என இறைவன் எழுதி வைத்துள்ளான். நம்பிக்கையான ஒருவரை தெய்வம் பார்த்து கொடுத்த பின் நாங்கள் எடப்பாடியை தேர்ந்தெடுத்தோம். ஓ.பி.எஸ்க்கு துரோகம் செய்தது சசிகலாவும், தினகரனும் தான்.
ஒருங்கிணைப்பாளராக ஓ.பி.எஸை நியமினம் செய்த போது சமாதானமாக சென்று விடலாம் என கூறினார்கள். ஆனால், தற்போது அவர் துரோகம் செய்து சென்று விட்டார். தேனியில் தோல்வியுற்றவர் டி.டி.வி. அவரிடம் மைக்கை நீட்டினால் எடப்பாடியார் கட்சியை ஒழித்துவிடுவார் என்கிறார். டி.டி.வி என்ன ஜோதிடரா? சசிகலா எல்லோரும் சேர வேண்டும் என பேசி வருகிறார். செல்லா காசுக்களால் எந்த பயனும் இல்லை. எனவே யாரும் அவர்கள் குறித்து கவலைப்படாதீர்கள்.
உறுப்பினர் பெயரை கேட்பது, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதும் தான் மிக முக்கியம். தற்போது சிலரிடம் சோம்பறித்தனம் இருக்கிறது. அதற்கு காரணம் ஓ.பி.எஸ் ம், தினகரனும் தான். யாரும் கவலைப்பட வேண்டாம். அதை தூக்கி எறிந்து விடுங்கள். 2026 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வருவதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது என்றார்.
அரியலூர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் அரியலூர் மாவட்ட கள ஆய்வு கூட்டம் மாவட்டச் செயலாளர் தாமரை ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அதிமுக துணை பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சர் கே பி முனுசாமி கலந்து கொண்டு பேசினார். அப்பொழுது, “2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றால் தான் அதிமுகவினர் ஷோக்காக செல்ல முடியும். தேர்தல் நமக்கு வாழ்வா சாவா என்பது போன்றது இதில் அதிமுக தோல்வி அடைந்தால் அரசியல் களம் மாறி சிறிய கட்சிகள் மேலே வருவதற்கான நிலை ஏற்படும்” என பேசினார்.