'நிர்வாகத் திறமையின்மையால் மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது' என விமர்சித்துள்ளார் முன்னாள் மின்துறை அமைச்சர் தங்கமணி.
நாமக்கல்லில் உள்ள அதிமுக அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ''மத்திய மின்சார ஒழுங்கு முறை ஆணையத்திடம் முறையாக கலந்தாலோசிக்காமல் மின்சார கட்டண உயர்வை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்துள்ளார். ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பாதிக்கப்படும் வகையில் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. நிர்வாக திறமையின்மையால் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
மின்சார துறை என்பது சேவைத்துறை, அதில் நஷ்டம் என்பது ஏற்படுவது சாதாரணம் விஷயம். ஆனால் அமைச்சர் செந்தில் பாலாஜி மின்சாரத் துறையின் வருமான நோக்கத்திற்காக கட்டணத்தை உயர்த்தியுள்ளார். கட்டணம் உயர்வுக்கு மத்திய அரசு மீது மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி வீண் பழி சுமத்துகிறார்'' என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அவர் முன்வைத்தார்.
தொடர்ந்து பேசிய தங்கமணி, ''கட்டண உயர்வால் மேற்கு மண்டலத்தில் உள்ள விசைத்தறி தொழில் உட்பட பல்வேறு தொழில்கள் பாதிக்கப்படும். எனவே உயர்த்தப்பட்ட மின்கட்டணத்தை அரசு திரும்ப பெற வேண்டும். முதல்வர் ஸ்டாலினிடம் நற்பெயர் வாங்குவதற்காக அவசரக் கதியில் விவசாயிகளுக்கு 1 லட்சம் மின்சார இணைப்பு வழங்கப்பட்டது. ஆனால் தற்போது ஓவர் லோடு காரணமாக பல இடங்களில் மின்மாற்றிகள் பழுதடைந்து வருகிறது. கடந்த அதிமுக ஆட்சியில் உற்பத்திக்கு அதிக செல்வீனங்கள் ஆகும் என்பதால் உடன்குடி, உப்பூர் மின் உற்பத்தித் திட்டங்கள் கைவிடப்பட்டது. ஆனால் தற்போதைய அரசால் அந்த திட்டங்களை மீண்டும் நடைமுறைப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வெளிச்சந்தையில் ஒரு யூனிட் மின்சாரம் 3 முதல் 4 ரூபாய்க்குள் கிடைக்கும் போது இத்திட்டத்தை செயல்படுத்தினால் ஒரு யூனிட்டுக்கு 7 ரூபாய் வரை உற்பத்தி செலவு ஆகும். இதற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி என்ன பதில் சொல்லபோகிறார்? திமுக அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் படிப்படியாக டாஸ்மாக் கடைகள் குறைக்கப்படும் என கூறினர், ஆனால் தற்போது தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் அதிகரித்து வருகிறது'' எனவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
இதையும் படிக்க: கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதத்தை டிஸ்மிஸ் செய்க' -ஆளுநரிடம் பாஜக வலியுறுத்தல்