செய்தியாளர்: மணிகண்டபிரபு
தவெக மாநாடு மற்றும் விஜய் பேசியது குறித்து மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள அதிமுக அலுவலகத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில்....
“விஜய்யின் தொடக்கம் நன்றாக உள்ளது. விஜய்யின் முதல் மாநாடு, விஜய் படம் ஒப்பனிங் போல சிறப்பாக இருந்தது. போகப் போகதான் விஜய் கட்சி செயல்பாடுகள் எல்லாம் தெரியும். சங்கரின் இந்தியன் 2 படம் போல பிரம்மாண்டமாக விஜய் மாநாடு இருந்தது. தேர்தலுக்கு இன்னும் நேரம் உள்ளது என்பதால், விஜய்யோடு அதிமுக தேர்தல் கூட்டணி வைக்க காலம் உள்ளது.
தவெக கொள்கைகளை ஏற்றுக் கொண்டால் நாங்கள் ஏன் அதிமுகவில் இருக்க வேண்டும்? தவெக-வில் சேர்ந்து கொள்ளலாமே. ஆக விஜய் தன் கட்சி கொள்கையை சொல்லி உள்ளார். தற்போதுதான் விஜய் கட்சி தொடங்கி, அதாவது பிறந்து அம்மா என்று கத்தியுள்ளார். தம்பி நல்லா பேசியிருக்கார். போகப் போக பார்ப்போம்.
விஜய் நன்றாக பேசுறார். கமல்ஹாசன் மாதிரி இல்லை. கமல்ஹாசன் கட்சி தொடங்கிய போது எந்த மொழியில் பேசினார் என தெரியவில்லை. மக்களுக்கும் புரியவில்லை. ஆனால், விஜய் தெளிவாக புரிந்து கொள்ளும் வகையில் அழகாக பேசினார். ஆட்சி அதிகாரத்தில் பங்கு என இப்போதுதான் திமுக ஆட்சியில் ஒவ்வொருத்தரும் குரல் எழுப்பி உள்ளனர். அதிமுக வேலையை விஜய் செய்கிறார் என சொல்லாதீர்கள். அதிமுக செய்யுற வேலையை விஜய் செய்கிறார். திமுகவுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி பேசினார். எடப்பாடி பழனிசாமி சொன்னதைதான் விஜய் சொல்கிறார்.
அதிமுக இடத்தை விஜய் எடுக்கவில்லை. யார் இடத்தையும் யாரும் எடுத்துக்கொள்ள முடியாது. மக்களுக்கு யாரை எந்த இடத்தில் வைக்க வேண்டும் என நன்றாகவே தெரியும். திமுகவில் உள்ள இளைஞர்கள் 50 சதவீதம் பேர் விஜய் ரசிகர்கள். திமுக இளைஞர் கூடாரம் காலியாக போவதால் திமுகவினர், விஜய்யை விமர்சிக்கின்றனர். அதனால்தான் குத்துது குடையுது என்கிறார்கள். உதயநிதி இன்னும் படங்களில் நடித்திருக்கலாம் என திமுக நிர்வாகிகள் தற்போது நினைக்கின்றனர்” என்று தெரிவித்தார்.