ஆவின் நிறுவனத்தில் வேலைவாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்த புகாரில், ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமீன் மனு உயர்நீதிமன்றதில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கைது செய்து விசாரிக்க வேண்டும் என்றும் விசாரணையின்போது காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ஆவின் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கித் தருவதாக கூறி 3 கோடி ரூபாய் பெற்று பணியும் வழங்காமல், பணத்தையும் திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றியதாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவில் தமிழக பால்வளத்துறை முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, என்.பாபுராய், வி.எஸ்.பலராமன், எஸ்.கே.முத்துப்பாண்டியன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் விஜய் நல்லத்தம்பி, ரவீந்திரன் ஆகியோர் அளித்த புகாரில் பதிவான வழக்கில் முன் ஜாமீன் கோரி ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட நால்வரும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
தங்களுக்கு எதிராக புகார் அளித்த நல்லத்தம்பி மீது அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி தொடர்பாக பல புகார்கள் உள்ளதாகவும், தங்களிடம் பணம் பறிக்கும் நோக்கில் அளிக்கப்பட்ட பொய் புகாரில் வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும் ராஜேந்திர பாலாஜி தரப்பில் மனுவில் குறிப்பிட்டிருந்தனர். இந்நிலையில் ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.