செய்தியாளர்: மணிசங்கர்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தாரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர் மற்றும் கடம்பூர் செ.ராஜூ ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது முன்னாள் அமைச்சர் கடம்பூர். செ.ராஜூ பேசிய போது...
“திமுகவில் அனைவருக்கும் பிறப்பால் பதவி கிடைக்கிறது. கருணாநிதி, அவரது மகன் மு.க.ஸ்டாலின், மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் என்று திமுக-வில் தலைமையிலுள்ள அனைவருமே பிறப்பால் அந்தப் பதவிக்கு வந்தனர். அதிமுக அப்படியல்ல. இங்கே உழைப்பால் அனைவருக்கும் பதவி கிடைக்கிறது.
மருத்துவத் துறையில் அதிக சாதனைகளை நிகழ்த்தி அதிக விருதுகளை பெற்றுத்தந்த ஒரே அமைச்சர் சி.விஜயபாஸ்கர்தான். கொரோனா காலத்தில் சிறப்பாக செயல்பட்ட காரணத்தினால் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரை பிரதமர் மோடியே பாராட்டியுள்ளார். ஆனால், தற்போதைய மருத்துவதுறை அமைச்சர் மா.சு., அத்துறைக்கே மாசு ஏற்படுத்தி விட்டார். இன்றைய சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருத்துவத் துறையையும் கெடுத்து, மக்களின் வாழ்வையும் கெடுத்துக் கொண்டிருக்கிறார்.
பொய்யான வாக்குறுதிகள் கொடுத்து திமுக ஆட்சிக்கு வந்து விட்டது. ஒரே கையெழுத்தில் நீட் தேர்வு ரத்து என்றார்கள். இன்றுவரை அதை நிறைவேற்றவில்லை.
செந்தில் பாலாஜி மீதுள்ள பயத்தினால்தான் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. ஆம், அமலாக்கத்துறையில் செந்தில் பாலாஜி வாயை திறந்தால் தாங்கள் மாட்டிக்கொள்வோம் என்ற பயத்தினால் அமைச்சர் பதவி வழங்கி உள்ளனர். செந்தில் பாலாஜி கெட்டிக்காரர்தான். ஏனெனில் அவரது கையில்தான் திமுக-வே உள்ளது” என்று தெரிவித்தார்.