அதிமுகவின் முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தனது ட்விட்டரில் காணொளி ஒன்றை பதிந்துள்ளார். அதில் இருசக்கர வாகனத்தில் வந்த மூதாட்டியொருவர் விபத்துக்குள்ளாகி இருக்கிறார். அவரை ஜெயக்குமார் விரைந்து மீட்டு, ஆட்டோ ஒன்றில் அமர வைத்து மருத்துவமனைக்கு ஏற்றி அனுப்புகிறார்.
இந்த வீடியோவை பகிர்ந்துள்ள ஜெயக்குமார், அத்துடன் “சென்னை புழல் அருகே மூதாட்டி ஒருவருடன் இரு சக்கர வாகனத்தில் வந்த ஒருவர் விபத்துக்குள்ளானார். இதில் மூதாட்டி படுகாயமடைந்துள்ளார்.
10 நிமிடங்களுக்கு மேலாக ஆம்பூலன்ஸ் வரவில்லை. மேலும் அவர்களுக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை. பிறகு நான் ஆட்டோ ஒன்றை ஏற்பாடு செய்து அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தேன்.
அந்த சாலையில் சென்ற யாரும் மூதாட்டி காயமுற்று கிடப்பதை கண்டும் கண்டுகொள்ளாமல் கடந்து சென்றதை பார்க்கும் போது மனிதம் மறந்து வருவதை நம்மால் உணர முடிந்தது. இன்று வேறொருவருக்கு என கடந்து போனால் நாளை நமக்கும் அது தான்! மருத்துவ உதவியே மகத்தான உதவி!” என்றுள்ளார். இப்பதிவு தற்போது வைரலாகி வருகிறது.