செய்தியாளர்: விக்னேஷ்முத்து
தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்-ன் 107-வது பிறந்தநாளை முன்னிட்டு அ.தி.மு.க. சார்பில் ஓட்டேரி மேம்பாலம் அருகே ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடைகள் மற்றும் நலதிட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், 1,000-க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “ஆட்சியில் இல்லாத நேரத்திலும் மக்களுக்கு உதவி செய்யக்கூடிய இயக்கம் அ.தி.மு.க” என்றார். தொடர்ந்து எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக பேசிய ஜெயக்குமார், “அது அ.தி.மு.க.வின் தொடர் முயற்சிக்கு கிடைத்த வெற்றி.
சட்டமன்றம் என்பது மாண்பு மற்றும் மரபின் அடிப்படையில் செயல்பட வேண்டும். ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் இயக்கம் தி.மு.க. எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக முதல்வர் சபாநாயகரிடம் நீங்கள் பரிசீலனை செய்யுங்கள் என அவர் தெரிவித்தவுடன் இந்த மாற்றம் நடைபெற்றுள்ளது.
இது எங்களுக்கு கிடைக்கப்பெற்ற உரிமை மற்றும் வெற்றி. நாட்டில் ஆயிரம் பிரச்னைகள் இருக்கின்றன. விலைவாசி கடுமையாக உயர்ந்திருக்கிறது. அரிசி விலை கிலோ ரூ.70 வரை உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக இருக்கிறது. இன்று கூட தஞ்சையில் இளைஞர் ஒருவர் ஓட ஓட விரட்டி விரட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். சபாநாயகர், முதல்வர், ஆளுநர் ஒருங்கிணைந்து செயல்படாததால் மக்கள் கஷ்டப்படுகிறார்கள். ஆளுநர் பேச இருந்த உரையில் அனைத்தும் தவறான தகவல்கள் இருந்தன.
நாடாளுமன்ற தேர்தலுக்காக அதிமுக தலைமையில் மகத்தான கூட்டணி அமையும். விரைவில் எங்களது கூட்டணியில் உள்ள கட்சிகள் விவரம் உங்களுக்கு தெரியவரும். தேர்தலுக்கு இன்னும் நிறைய காலம் இருக்கிறது; நிச்சயமாக மாற்றங்கள் ஏற்படும். மகத்தான கூட்டணி அமையும்” என தெரிவித்தார்.