கிருமி நாசினி வாங்கியதில் முறைகேடு புகார்: காஞ்சிபுரம் மாநகராட்சி முன்னாள் ஆணையர் வீட்டில் ரெய்டு!

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு லைசால் கிரிமிநாசினி வாங்கியதில் 32 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் முறைகேடு செய்து இழப்பு ஏற்படுத்தியதாகக் கூறி திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
maheshwari
maheshwaript desk
Published on

திருமதி மகேஸ்வரி என்பவர் கடந்த 2020 முதல் 2021 வரை காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையராக் பணிபுரிந்து வந்தார். அப்போது கொரோனா காலகட்டம் என்பதால் கொரோனா தடுப்பு பணிகளுக்காக (லைசால்) கிருமிநாசினி கொள்முதல் செய்துள்ளார். அதில், முறைகேடு நடந்ததாகக் கூறி காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சுடர்மணி என்பவர் கொடுத்த புகாரின் பேரில் காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர்.

இதில், லைசால் கிருமிநாசினி கொள்முதல் செய்ததில் 32 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு இழப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து நேற்று 22.06.23 காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில் மகேஸ்வரி பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு கடந்த மூன்று மாதமாக திண்டுக்கல் மாநகராட்சி ஆணையராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில், இன்று 23.06.23 காலை திண்டுக்கல் ஆர்எம். காலனி 1வது தெருவில் வாடகை வீட்டில் வசித்து வரும் ஆணையர் மகேஸ்வரி வீட்டிற்கு வந்த திண்டுக்கல் மாவட்ட லஞ்சஒழிப்புத் துறை டிஎஸ்பி நாகராஜன் தலைமையிலான 6 பேர் கொண்ட அதிகாரிகள் சோதனை ஈடுபட்டனர். அதேபோல் திருப்பூரில் உள்ள மகேஸ்வரியின் வீடு. காஞ்சிபுரம் மாநகராட்சியில் பணியாற்றிய துப்புரவு ஆய்வாளர்கள் வீடு என மொத்தம் 5 இடங்களில் சோதனை நடைபெற்றது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com