கடந்த 2016ம் ஆண்டு குட்கா ஆலை அதிபர் மாதவராவின் குடோனில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் சிக்கிய டைரியில், சென்னையின் முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்ட அதிகாரிகள், சுகாதாரத்துறை அமைச்சர் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றிருந்ததாக தகவல் வெளியானது. இதுதொடர்பான வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்ட நிலையில், சுமார் 35 இடங்களில் அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். குறிப்பாக சென்னை நொளம்பூரிலுள்ள முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் வீட்டில் அதிகாரிகள் ரெய்டில் ஈடுபட்டனர்.
சென்னை முகப்பேரில் உள்ள டிஜிபி ராஜேந்திரன் வீட்டிலும் இச்சோதனை நடைபெற்றது. இதேபோன்று மேலும் சில முக்கிய அதிகாரிகளின் வீடுகளில் நேற்று சோதனை நடத்தப்பட்டது. ஆனால் ஜார்ஜ் வீட்டில் மட்டும் 2வது நாளாக சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதனால் ஜார்ஜ் மிகுந்த குழப்பத்தில் ஆழ்ந்ததாக கூறப்பட்டது. நேற்று அவர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையில் ஆணையத்தில் ஆஜர் ஆனார். ஆனால் அவர் ஆஜர் ஆகவேண்டியது தேதி மாற்றப்பட்டது என்பதை பின்னர் உணர்ந்த ஜார்ஜ், அங்கிருந்து சில நிமிடங்களில் புறப்பட்டுச்சென்றார். இது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது. எப்போது கம்பீரக்குரல், அதிரடி செயல்கள் என இருக்கும் ஜார்ஜ், இப்படி குழப்பத்தில் திக்குமுக்காடிப் போய்விட்டாரே? என்ற பேச்சுக்குகள் கிளம்பினர். குட்கா விவகாரம் அவரது தொண்டையை அடைக்கிறது என விமர்சனங்களும் கிளம்பின.
பொதுவாக ஜார்ஜ் காவல் ஆணையராக பணியாற்றிய காலங்களில் அவர் செய்தியாளர்களை சந்தித்ததே இல்லை. அவரை செய்திளார்கள் சந்திப்பில் காண இயலாது. இப்படி விரைப்பாக இருந்த அதிகாரி, இன்று சிபிஐ சோதனைகளால் தாமாக முன்வந்து செய்தியாளர்களை சந்திக்கும் நிலையில் நிற்கிறார். அவர் இன்று செய்தியாளர்களை சந்திக்கவுள்ளதால், காவல்துறை உயர் அதிகாரிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மதியம் 2.30 மணிக்கு தனது நொளம்பூர் இல்லத்தில் செய்தியாளர்களை சந்திக்கும் ஜார்ஜ், எத்தனை குண்டுகளை பேச்சால் வீசப்போகிறார்? அது எப்படி வெடிக்கப்போகிறது? என்பதை பொருந்திருந்து தான் பார்க்க வேண்டும்.