காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் சோமாஸ்கந்தர் சிலை முறைகேடு வழக்கில் இந்து அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் வீரசண்முகமணி கைது செய்யப்பட்டுள்ளார்.
ஏகாம்பரநாதர் கோயிலில் ஆயிரத்து 300 ஆண்டுகள் தொன்மையான சோமாஸ்கந்தர் உற்சவர் சிலை இருந்தது. சோமாஸ்கந்தர் மற்றும் ஏலவார்குழலி பஞ்சலோகச் சிலை சேதமடைந்து விட்டதாகக்கூறி அதற்கு பதிலாக புதிய சிலை செய்ய முடிவெடுக்கப்பட்டது. அதற்கான அனுமதியை கடந்த 2015ஆம் ஆண்டு இந்து சமய அறநிலையத் துறை வழங்கியது.
பக்தர்களிடம் இருந்து கிலோ கணக்கில் தங்கம் தானமாக பெறப்பட்டு புதிதாக சிலைகள் செய்யப்பட்டன. சோமாஸ்கந்தர் சிலை செய்ததில் 8 புள்ளி 7 கிலோ தங்கம் முறைகேடு செய்யப்பட்டிருப்பதாக அண்ணாமலை என்பவர் புகாரளித்தார். அதன்பேரில் முன்னாள் தலைமை ஸ்தபதி முத்தையா, இந்து அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் கவிதா உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். கவிதாவை பணியிடை நீக்கம் செய்து இந்து அறநிலையத் துறை உத்தரவிட்டது.
இந்த நிலையில் அத்துறையின் முன்னாள் ஆணையர் வீரசண்முகமணியை சென்னையில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர். 2015 முதல் 2017ஆம் ஆண்டு வரை இந்து சமய அறநிலையத் துறை ஆணையராக இருந்தவர் வீரசண்முகமணி. அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.