செய்தியாளர்: C.பிரவீண்குமார்
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள மிகவும் பாதுகாக்கப்பட்ட ஆனைமலை புலிகள் காப்பகத்தின் மைய வனப்பகுதியில் நள்ளிரவில் அதிமுக பிரமுகர் ஒருவர் அத்துமீறி நுழைந்து இளம் காட்டு யானையை விரட்டியடித்துள்ளார். இது வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின்படி வேட்டையாடுவது போன்ற கடுமையான குற்றமாகும்.
இதற்கு குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும். இந்நிலையில் வீடியோவில் இருந்த நபர் கோட்டூரைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் மிதுன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவர் தனது வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஸ்டேட்டஸில் பதிவேற்றிய வீடியோவில், குற்றம் சாட்டப்பட்டவர் ஹை-பீம் விளக்குகளை ஒளிரச் செய்து, பின்னால் இருந்து யானைக்கு மிக அருகில் வாகனத்தை வேகமாக ஓட்டியதால் யானை பீதியில் ஓடுவதை நம்மால் காண முடிந்தது.
பின்னணியில் உரத்த இசையும் ஒலித்தது. முக்கிய புலிகள் காப்பக பகுதியான நவமலையில் வியாழக்கிழமை இரவு இந்த பரிதாப சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து வனத் துறையினர் மிதுனுக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து எச்சரித்ததாக வனத்துறை சார்பில் தெரிவிக்கபட்டுள்ளது.