பந்தலூர் அருகே உள்ள கொளப்பள்ளி பகுதியில் தொடர்ச்சியாக பொதுமக்களை தாக்கி வரும் சிறுத்தையை சுட்டுப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டு வருவதோடு, கடையடைப்பு மற்றும் வாகனங்கள் வேலை நிறுத்த போராட்டமும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மக்களை அச்சுறுத்தி வரும் சிறுத்தையை மயக்க ஊசி செலுத்திப் பிடிப்பதற்கான உத்தரவு கிடைத்துள்ளது.
சிறுத்தையை மயக்க ஊசி செலுத்திப் பிடிப்பதற்காக முதுமலை மற்றும் சத்தியமங்கலம் பகுதியில் இருந்து இரண்டு வன கால்நடை மருத்துவர்கள் கொளப்பள்ளி பகுதிக்கு வந்துள்ளனர். சிறுத்தையை மயக்க ஊசி செலுத்திப் பிடித்து அடர் வனப்பகுதியில் விடுவதற்கு முதன்மை வன உயிரின பாதுகாவலர் உத்தரவு வழங்கியிருக்கிறார். சிறுத்தையை பிடிக்கும் பணியில் 70-க்கும் மேற்பட்ட வனத் துறையினர் ஈடுபட்டு வருகிறார்கள். 5 இடங்களில் கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளன.