புலி, சிறுத்தையை பிடிக்க ஆட்டுக்கொட்டகை தோற்றத்தில் கூண்டு உருவாக்கி வனத்துறையினர் முயற்சி செய்து வருகின்றனர்.
கோவை மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் இருந்து அவ்வப்போது புலி, சிறுத்தைகள் வெளியேறி ஊருக்குள் வந்துவிடுகின்றன. மேலும், விவசாய நிலங்களில் அடைக்கப்பட்டுள்ள ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை இரைக்காக அடித்துக்கொன்று விடுகின்றன.
இந்த புலி, சிறுத்தைகளால் மனிதர்களுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுகிறது. இப்படி ஊருக்குள் புகும் புலிகளை கூண்டுகள் வைத்தே வனத்துறையினர் பிடித்து வருகின்றனர். ஆனால் இப்போதெல்லாம் கூண்டை கவனமாக நோட்டமிட்டு புலிகள் அதில் சிக்காமல் தப்பிவிடுவதாக கூறப்படுகிறது.
இதனால் வனத்துறையினர் வித்தியாசமான முயற்சியை கையாண்டுள்ளனர். ஆட்டு கொட்டகை போலவே கூண்டுகளை வடிவமைத்துள்ளனர். மர வண்ணத்தில் வண்ணம் பூசப்பட்டு, தென்னங்கீற்றுகளால் மேற்கூரையும் அமைத்துள்ளனர். ஆடுகளை அடைத்துவைக்கும் கொட்டகை போலவே கூண்டுகள் இருப்பதால் இனி புலி, சிறுத்தைகளை எளிதாக பிடிக்கலாம் என்று நம்புவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.