செய்தியாளர் விவேகானந்தன்
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருகே, வனப்பகுதியில் வசித்துவந்த மீனவ மக்களின் வீடுகளை வனத்துறையினர் இடித்துத் தள்ளியதால், கிராம மக்கள் செய்வதறியாமல் தவித்து வருகின்றனர். ஆக்கிரமிப்பில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் பூர்வ குடிகள் அல்ல என்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் என்றும் வனத்துறை விளக்கம் அளித்துள்ளது.
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருகே, வனப்பகுதியில் அமைந்துள்ள எடத்திட்டு, வேப்பமரத்து கோம்பு ஆகிய பகுதிகளில் 15-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்கள் கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்பிடித் தொழிலை செய்து வருகின்றனர். கடந்த ஐந்து தலைமுறைகளாக குடியிருந்துவரும் மக்களை, வனப்பகுதி நிலத்தில் குடியிருப்பதாக கூறி வனத்துறையினர் தொந்தரவு செய்துவருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், கடந்த சில மாதங்களாக மக்களை நோட்டீஸ் கொடுத்து வெளியேற்றும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், வனத்துறையினர் 10க்கும் மேற்பட்டோர், பொதுமக்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தும் பணியில் நேற்று ஈடுபட்டனர். வீட்டு கூரைகளை பிரித்து மக்களை வெளியேற்ற வனத்துறையினர் முயன்றதால், அங்கிருந்த மக்கள் உடல் மீது பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தற்கொலை செய்துகொள்ள முயன்றனர். கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதை தொடர்ந்து, வனத்துறையினர் அங்கிருந்து திரும்பிச்சென்றனர்.
இதில் பெண்கள் ஒரு சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டு பென்னாகரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இரவோடு இரவாக அங்கிருந்த மூன்று வீடுகளின் மேற்கூரைகளை வனத்துறையினர் இடித்துத்தள்ளியதாக கூறப்படுகிறது.
வீடுகளை இழந்ததால் வேதனையடைந்த பொதுமக்கள், போக இடம் இல்லாமல் வாழ்வாதாரம் இழந்து தவிப்பதாக தெரிவிக்கின்றனர். இதுகுறித்து தருமபுரி மாவட்ட வன அலுவலர் ராஜாங்கத்திடம் கேட்டபோது, சில மாதங்களுக்கு முன்பே, வனப்பகுதியில் உள்ளவர்களுக்கு வனத்தை விட்டு வெளியேறவேண்டும் என எச்சரிக்கை விடுத்ததோடு, நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அவர்களுக்கு மாற்று இடத்தை வருவாய்த்துறை வழங்கியும் அதை ஏற்க அப்பகுதி மக்கள் மறுத்து வருவதாகவும் அவர் விளக்கம் அளித்தார்.