வளர்ப்பு கால்நடைகளை தொடர்ந்து வேட்டையாடிய சிறுத்தையை தேக்கடி புலிகள் காப்பக வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்துள்ளனர்.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் குமுளியை அடுத்த தேக்கடி பெரியார் புலிகள் காப்பக வனப்பகுதியை ஒட்டிய நெல்லிமலை, வாழையடி, 62ம் மைல், மஞ்சுமலை ஆகிய பகுதிகளில் கடந்த ஒருமாத காலமாக சிறுத்தை நடமாட்டம் அதிகமாக இருந்தது. இரவில் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகும் சிறுத்தை ஆடு, மாடுகளை வேட்டையாடுவது தொடர்ந்தது. இதனால் மக்கள் அச்சமும் பீதியும் அடைந்தனர். இதுகுறித்து தேக்கடி பெரியார் புலிகள் காப்பக வனத்துறையினருக்கு புகார் அளிக்கப்பட்டது.
வனத்துறையினர் கால்தடங்களை கொண்டு அது சிறுத்தை என உறுதி செய்தனர். இந்நிலையில், நேற்று இரவு நெல்லிமலை பகுதியில் ஷஜு என்பவரது வீட்du ஆட்டுக்கொட்டகையின் அருகில் வனத்துறையினர் கூண்டு வைத்தனர். ஆட்டு இறைச்சியையும் கூண்டில் வைத்திருந்தனர். மூன்று மணி நேரத்தில் அங்கு வந்த சிறுத்தை கூண்டில் மாட்டிக்கொண்டது. மாட்டிக்கொண்ட சிறுத்தைக்கு வனத்துறை கால்நடை மருத்துவர் மூலம் பரிசோதனை செய்தனர். சிறுத்தை ஆரோக்கியமாக உள்ளதென உறுதி செய்யப்பட்டது.
இன்று அதிகாலை நான்கரை மணி அளவில் சிறுத்தையை தேக்கடி பெரியார் புலிகள் காப்பகத்தின் வல்லக்கடவு வனச்சரகத்திற்குட்பட்ட அடர்ந்த வனப்பகுதிக்கு கொண்டு சென்ற வனத்துறையினர், அதை வனப்பகுதிக்குள் திறந்து விட்டனர். ஒரு மாதமாக வளர்ப்பு கால்நடைகளை வேட்டையாடி வந்த சிறுத்தைப்புலி சிக்கியதால் வண்டிப்பெரியார் பகுதி குடியிருப்புவாசிகள் நிம்மதியடைந்தனர்.