கோவை குற்றால அருவியில் குளிக்க அனுமதி : சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

கோவை குற்றால அருவியில் குளிக்க அனுமதி : சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
கோவை குற்றால அருவியில் குளிக்க அனுமதி : சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
Published on

107 நாட்களுக்குப் பின்னர் கோவை குற்றால அருவியில் குளிக்க வனத்துறை அனுமதி அளித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த சில மாதங்களாக தமிழகம் முழுவதும் கடுமையான வறட்சி நிலவியது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மழைப்பொழிவு இல்லாததால் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அடுத்த சாடிவயல் பகுதியில் உள்ள குற்றால அருவியில் நீர்வரத்து நின்றது. இதனால் சுற்றுலாப் பயணிகள் குற்றால அருவிக்கு செல்ல கடந்த மார்ச் 26ஆம் தேதி வனத்துறையினர் தடை விதித்தனர். 

நீர் இல்லாததாலும் வனவிலங்குகள் நீர் தேடி அருவி பகுதிக்கு வரும் என்பதாலும் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டதாக வனத்துறையினர் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால், கோவை குற்றால அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. தற்போது வெள்ளப்பெருக்கு இல்லாத காரணத்தால் இன்று முதல் சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என கோவை மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார். 

மேலும், கோவை குற்றால அருவியில் பல்வேறு பராமரிப்பு பணிகள் செய்யப்பட்டிருப்பதாகவும், சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ ஏதுவாக இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்தார். 107 நாட்களுக்குப் பிறகு இன்று அனுமதி அளிக்கப்பட்டிருப்பதால் கோவை குற்றால அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டுகின்றனர். கோவை மட்டுமன்றி திருப்பூர், ஈரோடு, நீலகிரி மற்றும் கேரளா பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com