ஃபோர்டு தொழிற்சாலை விற்கப்படும் பட்சத்தில் நிரந்தர தொழிலாளர்களுக்கு பணி உத்தரவாதம் வழங்க வேண்டும் என்ற கொரிக்கையை ஏற்க நிர்வாகம் மறுத்துள்ளதால் தொழிற்சங்கத்தினர் சார்பில் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இழப்பு ஏற்பட்டதாகக் கூறி சென்னையை அடுத்து மறைமலை நகரில் இயங்கிவரும் ஃபோர்டு கார் உற்பத்தி தொழிற்சாலை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு பணிபுரியும் 4 ஆயிரம் தொழிலாளர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ஃபோர்டு நிறுவனத்தை வேறு நிறுவனத்திற்கு விற்கும்பட்சத்தில் அங்கு தங்களுக்கு பணி வழங்க வேண்டுமென்று வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர் நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து இரண்டாவது நாளாக தொழிற்சங்கத்தினருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது பணி உத்தரவாதம் வழங்க நிர்வாகம் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
மேலும் தொழிலாளர்களுக்கு இழப்பீடு ஊக்கத்தொகை வழங்குவது குறித்து பேச நிர்வாகம் அழைப்பு விடுத்ததாக தெரிகிறது. இதனால் ஃபோர்டு தொழிற்சங்கத்தினர் மறைமலை நகர் தொழிற்சாலை வளாகத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.