வேலூர் மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய மரபு காய்கறி திருவிழா!

வேலூர் மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய மரபு காய்கறி திருவிழா!
வேலூர் மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய மரபு காய்கறி திருவிழா!
Published on

தமிழகத்தில் முதல் முறையாக இப்படியான ஒரு பிரம்மாண்ட விழா நடந்ததாகவும். தொடர்ந்து மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் நடத்த திட்டமிட்டிருப்பதாக விழா குழுவினர் கூறினர். 

வேலூர் மாநகரில் உள்ள வெங்கடேஷ்வரா மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு விதை சேகரிப்பாளர்கள் கூட்டமைப்பு சார்பில் மாபெரும் மரபு காய்கறி மற்றும் கிழங்கு திருவிழா 2023 நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்ட காய்கறிகள், கிழங்குகள், கீரைகள் மற்றும் மூலிகைகள் சிறப்பு கண்காட்சிக்கு வைக்கப்பட்டு. வேளாண் குறித்த கருத்தரங்குகள் நடைபெற்றது.

இதில் வேலூர், திருவண்ணாமலை மட்டும் இன்றி தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் வருகை தந்து அரங்குகள் அமைத்து விற்பனை செய்தனர். விவசாய பொருட்களை மதிப்பு கூட்டும் 35 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தது. காலை முதல் மாலை 4.00 மணிவரை நடைபெற்ற இவ்விழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்வமுடன் பங்கேற்று பாரம்பரிய மற்றும் இயற்கை விளை பொருட்களை வாங்கி செல்கின்றனர். இயற்கை விவசாயம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியும், 500 க்கும் மேற்பட்ட காய்கறிகளை மீட்டெடுத்து அதனை பொது மக்களை பயன் படுத்த தூண்டும் நோக்கமாக இத்திருவிழா நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து இத்திருவிழாவை பார்வையிட்ட வேலூரை சேர்ந்த பாபு என்பவர் கூறுகையில், முதல் முறையாக வேலூரில் இது போன்றதொரு விழா நடைபெறுகிறது. மிகவும் பயனுள்ளதாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இதே போல செய்தால் பயனுள்ளதாக இருக்கும், குழந்தைகளுக்கு இதெல்லாம் என்னவென்றே தெரியாது தற்போது அதனை ஆர்வமாக பார்க்கிறார்கள். 

வேலூரை சேர்ந்த சந்திரகலா கூறுகையில், ''இத்தனை ஆண்டுகளாக நாங்கள் பார்க்காத காய் வகைகளை இங்கு பார்த்தோம். அது எங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது” என்றார்.

வேலூரை சேர்ந்த கனிமொழி என்பவர் கூறுகையில், ''நான் ஏற்கனவே இயற்கை சார்ந்த உணவுப் பொருட்களை வீட்டில் பயன்படுத்தி வருகிறேன். அதன் ஆர்வம் காரணமாகவே இங்கு குழந்தைகளோடு வந்தேன். ஆனால், இங்கு வந்து பார்த்த பிறகு இன்னும் அதிகமான வகைகளை தெரிந்து கொண்டேன். எங்கள் பிள்ளைகளும் மரபு சார்ந்த காய்கறிகளை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அழைத்து வந்தேன் மிகவும் பயனுள்ளதாக இருந்தது” என்றார்.

தாம்பரத்தில் இருந்து வருகை தந்திருந்த ராஜேஷ் என்பவர் கூறுகையில், ''எனக்கு இயற்கை விவசாயத்திலும், இயற்கை காய்கறிகளிலும் ஆர்வம் உள்ளது. வேலூரில் இதுபோன்று நடப்பதை அறிந்து குடும்பத்தோடு தாம்பரத்திலிருந்து வந்துள்ளேன். இங்கு வந்து பார்த்தபோது பல ஆச்சரியங்கள் காத்திருந்தது. இன்றைய தலைமுறையினரும் இதனை கடைப்பிடிக்க வேண்டும். இலவசமாக விதைகளை கொடுத்தார்கள் அது மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது” என்றார்.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரும் உழுது உண் சுந்தர் கூறுகையில், ''தமிழ்நாடு முழுவதும் பயணித்து சுமார் 500க்கும் மேற்பட்ட காய்கறி மற்றும் கிழங்கு வகைகளை சேகரித்து வைத்துள்ளோம். கடந்த ஆறு மாதங்களாக இது போன்று ஒரு மரபுசார் காய்கறி மற்றும் கிழங்கு திருவிழாவை நடத்த திட்டமிட்டு வந்தோம் அந்த வகையில் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவிலேயே முதல்முறையாக இது போன்ற ஒரு விழாவை வேலூரில் நடத்தியுள்ளோம். இது போன்ற ஒரு விழாவை நடத்த காரணம் பாரம்பரிய விதைகளை மீட்டெடுக்கவும், மக்களை பாரம்பரிய விதைகளை வைத்து பயன்படுத்தவும் நடத்தி வருகிறோம். பாரம்பரியான விதைகளை கொடுப்பதன் மூலம் உடல் நலத்தையும் பாதுகாக்க முடியும் என நம்புகிறோம்.  எதிர்பார்த்ததை விட அளவுக்கு அதிகமாக மக்களிடம் இருந்து வரவேற்பு இருந்தது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இனிவரும் நாட்களில் மற்ற மாவட்டங்களிலும் இதனை நடத்த திட்டமிட்டுள்ளோம்.

மற்றொரு ஒருங்கிணைப்பாளரான பிரியா கூறுகையில், ''தனித்தனியே இயங்கி வந்த மரபுசார் விதை சேகரிப்பாளர்கள் இணைந்து இந்த விழாவை நடத்தி உள்ளோம். இதற்கு வேலூர் மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்று வெற்றி பெற்றுள்ளது. இதற்காக 15 ஆண்டுகள் நாங்கள் அலைந்து விதைகளை சேகரித்து முயற்சியை முன்னெடுத்து வருகிறோம். மக்கள் மிகுந்த ஆர்வமாக இருக்கிறார்கள்” என கூறினார்.

சுபஸ்ஸ்ரீ செக்கு எண்ணை விற்பனையளர் செய்யும் வேலூரை சேர்ந்த சுபஷ்ஸ்ரீ கூறுகையில், ''நான் பல ஆண்டுகளாக மரச்செக்கு எண்ணெய் மற்றும் நாட்டுச்சர்க்கரை மற்றும் கொம்புத்தேன் ஆகியவற்றை விற்பனை செய்து வருகிறேன்.  இந்த மரபுசார் காய்கறி திருவிழா எங்களை போன்றவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது” என கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com