மாநிலத்தின் தலைநகரையே புரட்டிப் போட்ட மிக்ஜாம் புயல் கரையைக் கடந்து ஒரு வாரத்துக்கும் மேல் ஆகிவிட்டது... ஆனால் புயல் விட்டுச் சென்ற சுவடுகள், அதனால் ஏற்பட்ட இழப்புகள், இவற்றிலிருந்து மீள முடியாமல் பொதுமக்கள் இன்னமும் தவித்து வருகின்றனர். அதை ஈடு செய்ய மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் வெள்ள நிவாரண தொகை, ரொக்கமாக வழங்கப்படும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது தமிழக அரசு.
அதில், “சென்னை மாவட்டத்தின் அனைத்து வட்டங்களுக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம், வண்டலூர், திருப்போரூர் ஆகிய வட்டங்களுக்கும், காஞ்சிபுரத்தில் குன்றத்தூர், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய வட்டங்களுக்கும், திருவள்ளூரில் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஆவடி, பூவிருந்தவல்லி, ஊத்துக்கோட்டை, திருவள்ளூர் ஆகிய வட்டங்களுக்கும் இந்த நிதி வழங்கப்படும்.
மேலும் இதற்காக பாதிக்கப்பட்ட பகுதிகளில் டோக்கன் வழங்கப்படும். அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் பாதிப்பு விவரங்கள் மற்றும் வங்கிக் கணக்கு எண் ஆகியவற்றை கொடுத்து நிவாரணத் தொகையைப் பெற்றுக் கொள்ளலாம். மழையில் பல ஏடிஎம் மையங்களில் கோளாறு ஏற்பட்டுள்ளதால் நிவாரணத் தொகையை ரொக்கமாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பப்படிவங்களை பொதுமக்கள் ரேஷன் கடைகளில் இருந்து பெற்று அதனை பூர்த்தி செய்து ரொக்கத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.
நிவாரண தொகையை வழங்குவதற்காக நியாயவிலைக் கடை பணியாளர்களுக்கு பயிற்சி வழங்குவது, முறையாக டோக்கன் வழங்குவது உள்ளிட்டவை குறித்து அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்” எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.