``மருத்துவர்கள் அலட்சியத்தால் இளம் கால்பந்து வீராங்கனை உயிரிழப்பு”- அமைச்சர் விளக்கம்

``மருத்துவர்கள் அலட்சியத்தால் இளம் கால்பந்து வீராங்கனை உயிரிழப்பு”- அமைச்சர் விளக்கம்
``மருத்துவர்கள் அலட்சியத்தால் இளம் கால்பந்து வீராங்கனை உயிரிழப்பு”- அமைச்சர் விளக்கம்
Published on

சென்னையில் கால் அகற்றப்பட்ட கால்பந்து வீராங்கனை பிரியா ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.

சென்னை வியாசர்பாடியை சேர்ந்த பிரியா (17),  சிறுவயது முதலே கால்பந்து விளையாட்டில் ஆர்வம் கொண்டு பல்வேறு போட்டிகளில் பங்கேற்று அசத்தி வந்தவர்ர். மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் அவர் பங்கேற்று வந்தார். இந்நிலையில் தான் சமீபத்தில் பிரியா மூட்டு வலியால் பாதிக்கப்பட்டிருக்கிறார். இதையடுத்து அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றுள்ளார். சென்னை கொளத்தூர் பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் பிரியாவை டாக்டர்கள் பரிசோதித்தனர். அப்போது பிரியாவின் வலது கால் மூட்டுப் பகுதியில் ஜவ்வு விலகி இருப்பதாக கூறியுள்ளனர். இதையடுத்து அவருக்கு மூட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

அறுவை சிகிச்சைக்கு பின் பிரியாவின் கால் வீக்கம் ஏற்பட்டு காணப்பட்டது. இதையடுத்து மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். மேலும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவரது வலது காலில் ரத்த ஓட்டம் தடைப்பட்டதும், அதனால் தான் அறுவை சிகிச்சைக்கு பிறகு கால் வீங்கியதும் தெரியவந்தது. இது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம் எனக்கூறி அவரது வலது கால் அகற்றப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையால் தான், கால் அகற்றப்பட வேண்டிய நிலை பிரியாவுக்கு ஏற்பட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டினர். மேலும் கவனக்குறைவாக உள்ள டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து இதுகுறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் விசாரணைக்கு உத்தரவிட்டார்.

அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் பேசுகையில், “சுருக்கு கட்டு போடும் போது ஏற்பட்ட கவன குறைவால் உயிருக்கு ஆபத்து ஏற்பட்ட சூழலில் கால்கள் நீக்கப்பட்டது. இது தொடர்பாக அமைக்கப்பட்ட மருத்துவக் குழு அளித்த விளக்கத்தின் பேரில் சம்பந்தப்பட்ட 2 மருத்துவர்கள் பணியிடை மாற்றம் செய்யப்பட்டதுடன் துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் மாணவிக்கு அதிநவீன செயற்கை கால் பொருத்தவும், அரசு வேலை வாய்ப்பை அளிக்க உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த வீராங்கனை பிரியா, இன்று காலை உயிரிழந்தார். காலை 7.15 மணியளவில் சிகிச்சை பலனின்றி பிரியா இறந்தார். இது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இதுகுறித்து இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்ரமணியன், “ரத்த ஓட்டம் பாதித்ததால், வீராங்கனை பிரியாவின் ரத்த நாளங்கள் பழுதாகி உள்ளது. மேல் சிகிச்சைக்காக அவர் கடந்த பத்தாம் தேதி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். நேற்று முன்தினம் நேரடியாக வந்து அவரை பார்த்து, அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படும் குறித்து கேட்டு அறிந்தேன். தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டதால் எலும்பு சிகிச்சை நிபுணர் மூட்டு நிபுணர், மயக்கவியல் மருத்துவர் உள்ளிட்டவர்கள் சிகிச்சை அளித்தனர். தொடர் சிகிச்சை இருந்த போதும் இன்று காலை மாணவி பிரியா உயிரிழந்தார். 

உடனடியாக மருத்துவ வல்லுனர் குழு ஒன்றை அமைத்து விசாரிக்க செய்தோம். பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை செய்த மருத்துவர்களின் கவனக்குறைவும் காரணம் என்று தெரிந்தது. கவனக்குறைவுடன் மாணவி பிரியாவுக்கு சிகிச்சை அளித்த 2 மருத்துவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே இரு மருத்துவர்களும் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.  மேலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு துறை ரீதியான நடவடிக்கைக்கு உத்தரவிடப்படும். 2 மருத்துவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு கவல்துறை நடவடிக்கைக்கு புகார் அளிக்கப்படும். 
தமிழ்நாடு அரசு சார்பில் பிரியாவின் குடும்பத்திற்கு 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும்.  மாணவி பிரியா முதலில்  ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்தபோது வீடு அருகில் என்பதால் பெரியார் நகர் மருத்துவமனைக்கு மாற்றினார்களா என்பது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்படும். மேலும்துறை ரீதியான, சட்ட ரீதியான நடவடிக்கை தொடரப்படும் என்றும் மருத்துவர் குழு விசாரணையும் தொடர்ந்து நடைபெறும்” என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
பின்னர் பிரியாவின் தந்தை மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பேசும்போது இறப்பிற்கு காரணமான மருத்துவர்களை கைது செய்ய வேண்டும். இனி இதுபோன்ற யாருக்கும் அரசு மருத்துவமனையில் நடக்க கூடாது 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com