விழுப்புரத்தில் உள்ள கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் உணவுப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சாயம் பூசப்பட்ட காய்கறிகள், கலப்படம் செய்யப்படும் உணவுப் பொருட்கள் என சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்துக்களையும், வீடியோக்களையும் பகிர்ந்து வருகின்றனர். இதுதொடர்பாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்களும் கோரிக்கைகளை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பகுதிகளில் உள்ள கடைகளில் உணவுகளை ஆய்வு செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். அதன்பேரில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன நியமன அலுவலர் வேணுகோபால், தலைமையில் திண்டிவனம் பகுதியில் உள்ள கடைகளில் திடீர் சோதனை நடத்தப்பட்டது.
திண்டிவனம் நகராட்சிக்கு உட்பட்ட நேரு வீதி, இந்திரா காந்தி பேருந்து நிலையம், கிடங்கள், பிள்ளையார் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 30க்கும் மேற்பட்ட கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின்போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் கலப்படம் செய்யப்பட்ட டீ தூள் 55 கிலோ, காலாவதியான குளிர்பானம் 20 லிட்டர், அதிக வண்ணம் போடப்பட்ட உணவு பொருட்கள் 15 கிலோ ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. இந்த நடவடிக்கை மாவட்டம் முழுவதும் தொடர்ந்து நடத்தப்பட்டு சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.