எடப்பாடி பழனிசாமி தலைமையில் பதவியேற்றுள்ள அரசு இன்று பேரவையில் நம்பிக்கை வாக்கு கோருகிறது. புதிய அரசு நீடிக்குமா என்பது வாக்கெடுப்பின் முடிவில் தெரியவரும்.
தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டம் இன்று கூடுகிறது. புதிய முதலமைச்சராக பதவியேற்றுள்ள எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு, நம்பிக்கை வாக்கெடுப்பில் தனது பெரும்பான்மையை நிருபிக்க உள்ளது. இதற்காக காலை 11 மணிக்கு கூடும் சிறப்புக்கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நம்பிக்கை கோரும் தீர்மானத்தை கொண்டுவருவார். இந்த தீர்மானத்தில், அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்று அதிமுக எம்எல்ஏக்களுக்கு கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஓ.எஸ். மணியன் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே கூவத்தூரில் தங்கியுள்ள எம்எல்ஏக்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். கே.ஏ. செங்கோட்டையன் உள்ளிட்ட மூத்தநிர்வாகிகள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில், சிறப்பு சட்டப்பேரவைக்கூட்டத்தில் வாக்களிப்பது குறித்த விளக்கங்கள் அளிக்கப்பட்டன.
நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில், சட்டம், ஒழுங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக, தலைமைச்செயலாளர் கிரிஜா தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. உள்துறை செயலர் அபூர்வ வர்மா, டிஜிபி டிகே ராஜேந்திரன், சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஜார்ஜ், உளவுத்துறை ஐஜி டேவிட்சன் தேவாசிர்வாதம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.