தொடர் மழை காரணமாக பவானி சாகர் அணை 100 அடியை எட்டுகிறது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் அவலாஞ்சி, அப்பர் பவானி ஆகிய நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக பில்லூர் அணை முழு கொள்ளளவை எட்டியது. இதனால் அணைக்கு வரும் உபரிநீர் அப்படியே பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டது. பவானி ஆறு மற்றும் மாயாற்று நீரும் அணைக்கு வந்து சேருவதால் பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
ஜூலை 5-ஆம் தேதி 83 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் படிப்படியாக அதிகரித்து வெள்ளிக்கிழமை நிலவரப்படி 99.26 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு நீர்வரத்து 2 ஆயிரத்து 823 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் 905 கன அடியாகவும் நீர் இருப்பு 28.23 டிஎம்சியாகவும் உள்ளது.
அணைககு நீர்வரத்து இதே நிலை நீடித்தால் இன்றிரவு 100 அடியை எட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. பொதுப்பணித் துறை நீர் மேலாண்மை விதிகளின் படி ஜூலை மாதம் அணையில் 100 அடிக்கு மேல் நீரை தேக்கி வைக்க இயலாது என்பதால் அணைக்கு வரும் உபரிநீர் அப்படியே ஆற்றில் திறந்து விடப்படும் என பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து பவானி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதியில் குடியிருப்போர் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறும் ஆடு, மாடு மேய்க்ககூடாது, துணி வைக்கக் கூடாது என ஒலி பெருக்கி மூலம் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பவானி சாகர் அணை 67 ஆண்டுகளில் 28-வது முறையாக 100 அடியை எட்டுகிறது.
பவானிசாகர் அணை வேகமாக நிரம்புவதால் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வழக்கமாக ஆகஸ்ட 15ஆம் தேதி கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது வழக்கம். இந்த ஆண்டு 100 அடியை எட்டுவதால் முன்கூட்டியே பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படலாம் என பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.