நாமக்கல்லில் தண்ணீரில் மிதக்கும் அதிசய கல் விநாயகர் சிற்பத்தை செய்து அசத்தியுள்ள சிற்பிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
நாமக்கல் அடுத்துள்ள கூலிப்பட்டியைச் சேர்ந்தவர் சிற்பி ஜெகதீசன். இவர், பரம்பரை பரம்பரையாக சிற்ப தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவர் சிற்ப தொழிலில் புதுமையை புகுத்தி வித்தியாசமான சிலைகளை செய்வதில் வல்லவர். இவர் செய்த ஒற்றை கல்லினால் ஆன சங்கிலி மிகவும் தத்ரூபமாக இருக்கும். அதேபோல் ஒற்றை கல்லில் தேர் மற்றும் புல்லாங்குழலை செய்து 2009-ல் அப்போதைய வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி கைகளால் தேசிய விருதும் வாங்கியுள்ளார்.
இந்நிலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிற்பி ஜெகதீசன் கல்லினால் ஆன விநாயகர் சிலை, மாடம் மற்றும் படகுகளை செய்து அசத்தியுள்ளார். இதில் சுவாரசியம் என்னவென்றால் விநாயகர் சிலை, மாடம் மற்றும் படகுகள் ஆகியவை தண்ணீரில் மிதக்கும் வகையில் சிற்பி ஜெகதீசன் வடிவமைத்துள்ளார் என்பது ஆச்சரியமான ஒன்றாகும். இவர் செய்துள்ள தண்ணீரில் மிதக்கும் கல் விநாயகரை அக்கம்பக்கத்தினர் ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.
இதுகுறித்து சிற்பி ஜெகதீசன் கூறுகையில்... பரம்பரை பரம்பரையாக சிற்பத் தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். புதிதாக ஏதேனும் செய்ய வேண்டும் என்ற நோக்கில் விநாயகர் சிலை ஒன்றை தண்ணீர் மிதக்கும் வகையில் கல்லால் அதன் எடைக்கு ஏற்றவாறு வடிவமைத்துள்ளேன். ஏற்கனவே இதுபோன்று புதுவிதமாக பல சிற்பங்களை வடிவமைத்துள்ளேன். அந்த வகையில் விநாயகர் சிலையை வடிவமைத்தாக தெரிவித்தார்.