தை திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் முழுவதுமுள்ள தமிழ் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர். இதன் காரணமாக பேருந்துகள், ரயில்கள் என்று அனைத்திலும் மக்கள் கூட்டம் அதிகரித்த வண்ணம் காணப்படுகிறது. அதை கட்டுபடுத்தவும் மக்களின் பயணத்தினை எளிதாக்கும் வகையிலும் பொங்கலை முன்னிட்டு அரசு சார்பிலேயே சிறப்பு பேருந்துகள், ரயில்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளன.
இருப்பினும் பலருக்கு சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு பயணச்சீட்டு கிடைக்காத நிலையே நீடிக்கிறது. இதை சாதகமாக பயன்படுத்தி கொண்டு பயணக்கட்டணங்களின் விலையை பன்மடங்கு உயர்த்தி வருகின்றன சில ஆம்னி பேருந்துகள். இதனால் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
பேருந்துகள் மட்டுமன்றி, விமான பயணக்கட்டணங்களின் விலையும் பன்மடங்கு உயர்ந்துள்ளது.
வழக்கமாக ரூ.4,000 - ரூ.7,000 ஆக இருக்கும் டிக்கெட்டின் விலை தற்போது ரூ.15,000 - ரூ.21,000 வரை உயர்ந்துள்ளது. இதனால் பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். குறிப்பாக மதுரை, தூத்துக்குடி, கோவை, திருச்சி, பெங்களூருவுக்கு டிக்கெட் விலை ரூ.15,000 - ரூ.21,000 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் தொடர் விடுமுறை நாட்கள் காரணமாக கோவா, அந்தமான் செல்லும் விமானங்களில் இருக்கைகள் நிரம்பி காணப்படுகின்றன. இதனால் கடைசிநேர டிக்கெட் விலை ரூ, 27,000 ஆக உயர்ந்துள்ளது.
டெல்லி, மும்பை, ஜெய்ப்பூர், சீரடி செல்லும் விமானங்களில் ஒருசில இருக்கைகளே காலியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. ஏர் இந்தியா விமானத்தில் முதல் வகுப்பில் பயணிப்பதற்கான கட்டணமே ரூ.41,000 ஆக உயர்ந்துள்ளது.
தங்களது சொந்த ஊர்களில் பொங்கலை கொண்டாட வேண்டும் என்ற காரணத்தால், பொதுமக்களால் பயணத்தை தவிர்க்க முடியவில்லை.