செய்தியாளர்: அ.ஆனந்தன்
ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில் அமைந்துள்ள புனித சந்தியாகப்பர் ஆலயத்தின் 482ஆம் ஆண்டு திருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் துவங்கியது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் தீவு மீனவ மக்களின் பாதுகாவலர் என அழைக்கப்படும் புனித சந்தியாகப்பர் ஆலயம் தங்கச்சிமடத்தில் அமைந்துள்ளது. இங்கு மத, சாதி, சமுதாய வேறுபாடுகளை கடந்து அனைத்து மக்களும் வழிபடுவது வழக்கம்.
இந்நிலையில், நேற்று மாலை புனித சந்தியாகப்பர் ஆலயத்தின் 482 ஆம் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த கொடிக் கம்பத்தில் சிவகங்கை அருள்பணி இயக்குநர் செபாஸ்டின் கொடியேற்றி திருவிழாவை துவக்கி வைத்தார். பங்குத் தந்தை ஆரோக்கிய ராஜா சிறப்பு திருப்பலி பூஜைகளை நடத்தினார்.
இதைத் தொடர்ந்து பிரார்த்தனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், விழா குழு தலைவர் அருள்தாஸ், தங்கச்சிமடம் ஜமாத் தலைவர் மற்றும் சமுதாய தலைவர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கொடியேற்ற நிகழ்ச்சியில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட அனைத்து சமுதாய பக்தர்களும் கலந்து கொண்டனர்.