சூரரைப் போற்று வெளியீட்டு தொகையில் கொரோனா முன்கள பணியாளர்களுக்கு ரூ.5 கோடி உதவி: சூர்யா

சூரரைப் போற்று வெளியீட்டு தொகையில் கொரோனா முன்கள பணியாளர்களுக்கு ரூ.5 கோடி உதவி: சூர்யா
சூரரைப் போற்று வெளியீட்டு தொகையில் கொரோனா முன்கள பணியாளர்களுக்கு ரூ.5 கோடி உதவி: சூர்யா
Published on

இணையம் வழியாக வெளியாகும் ‘சூரரைப் போற்று’ திரைப்பட வெளியீட்டுத்தொகையில் இருந்து பொதுமக்களுக்கும், திரையுலகை சார்ந்தவர்களுக்கும், தன்னலம் பாராமல் ‘கொரோனா யுத்த காலத்தில்’ முன்னின்று பணியாற்றியவர்களுக்கும், ஐந்து கோடி ரூபாய் பகிர்ந்தளிக்கப்படும் என்று நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.

“இவ்வளவு பிரச்னைகளுக்கு இடையிலும் ஒரு பூ பூக்கத்தானே செய்கிறது” என்ற எழுத்தாளர் பிரபஞ்சனின் வார்த்தைகள் நம்பிக்கையின் ஊற்று. கண்ணுக்கு தெரியாத வைரஸ், ஒட்டுமொத்த மனிதகுலத்தின் செயல்பாட்டையும் நிறுத்தி வைத்திருக்கும் சூழலில், பிரச்னைகளில் மூழ்கிவிடாமல், நம்பிக்கையுடன் எதிர்நீச்சல் போடுவதே முக்கியம்.

இயக்குனர் ‘சுதா கொங்கரா’ அவர்களின் பல ஆண்டுகால உழைப்பில் உருவாகியுள்ள “சூரரைப்போற்று” திரைப்படம் எனது திரைப்பயணத்தில் மிகச்சிறந்த படமாக நிச்சயம் இருக்கும். மிகப்பெரிய வெற்றியை அளிக்கும் என்று நம்புகிற இத்திரைப்படத்தை, திரையரங்கில் அமர்ந்து என் பேரன்பிற்குரிய சினிமா ரசிகர்களுடன் கண்டுகளிக்கவே மனம் ஆவல் கொள்கிறது. ஆனால் காலம் தற்போது அதை அனுமதிக்கவில்லை. பல்வேறு கலைஞர்களின் கற்பனை திறனிலும், கடுமையான உழைப்பிலும் உருவாகும் இத்திரைப்படத்தை சரியான நேரத்தில் மக்களிடம் கொண்டு சேர்ப்பது தயாரிப்பாளரின் முக்கிய கடமை. எனது ‘2டி எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் இதுவரை எட்டு படங்களை தயாரித்து வெளியிட்டுள்ளது. மேலும் பத்து படங்கள் தயாரிப்பில் உள்ளன. என்னை சார்ந்திருக்கிற படைப்பாளிகள் உட்பட பலரின் நலன் கருதி முடிவுகளை எடுக்க வேண்டியது அவசியமாகிறது. சோதனை மிகுந்த காலகட்டத்தில் நடிகராக இல்லாமல், தயாரிப்பாளராக முடிவெடுப்பதே சரியாக இருக்குமென நம்புகிறேன்.

சூரரைப்போற்று திரைப்படத்தை ‘அமேசான் பிரைம் வீடியோ’ மூலம் இணையம் வழி வெளியிட முடிவு செய்திருக்கிறோம். தயாரிப்பாளராக மனசாட்சியுடன் எடுத்த இந்த முடிவை, திரையுலகை சார்ந்தவர்களும், என் திரைப்படங்களை திரையரங்கில் காண விரும்புகிற பொதுமக்களும், நற்பணி இயக்கத்தை சேர்ந்த தம்பி தங்கைகள் உள்ளிட்ட அனைவரும் புரிந்துகொள்ள வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் அனைவரின் மனம் கவர்ந்த திரைப்படமாக சூரரைப்போற்று திரைப்படம் நிச்சயமாக அமையும். மக்கள் மகிழ்ச்சியோடு திரையரங்கம் வந்து படம் பார்க்கும் இயல்புநிலை திரும்புவதற்குள் கடினமாக உழைத்து, ஒன்றுக்கு இரண்டு படங்களில் நடித்து திரையரங்கில் ரிலீஸ் செய்துவிட முடியுமென நம்புகிறேன். அதற்கான முயற்சிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறேன்.

இருப்பதை அனைவருடன் பகிர்ந்து வாழ்வதே சிறந்த வாழ்வு. இந்த எண்ணத்தை இன்றளவும் செயல்படுத்தியும் வருகிறேன். ‘சூரரைப் போற்று’ திரைப்பட வெளியீட்டுத்தொகையில் இருந்து தேவையுள்ளவர்களுக்கு ‘ஐந்து கோடி ரூபாய்” பகிர்ந்தளிக்க முடிவு செய்திருக்கிறேன்.

பொதுமக்களுக்கும், திரையுலகை சார்ந்தவர்களுக்கும், தன்னலம் பாராமல் ‘கொரோனா யுத்த காலத்தில்’ முன்னின்று பணியாற்றியவர்களுக்கும், இந்த ஐந்து கோடி ரூபாய் பகிர்ந்தளிக்கப்படும். உரியவர்களிடம் ஆலோசனை செய்து அதற்கான விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும். உங்கள் அனைவரின் அன்பும்,ஆதரவும்,வாழ்த்தும் தொடர வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இந்த நெருக்கடி சூழலை மனவுறுதியுடன் எதிர்த்து மீண்டு எழுவோம்” என்று தெரிவித்துள்ளார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com