இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர் பிரிட்ஜோ சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் குறித்து திமுக மற்றும் அதிமுக உறுப்பினர்கள் தொடர்ந்து மத்திய அரசுக்கு அழுத்தம்கொடுத்து வருகின்றனர்.
மக்களவையிலும், வெளியுறவுத்துறை அமைச்சகத்திலும் ஒலித்த குரல்களின் பலனாக, மீனவர் கொல்லப்பட்டது தொடர்பான விசாரணைக்கு இலங்கை அரசு ஒத்துக்கொண்டிருப்பதாக வெளியுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு தொடங்கியதும், மக்களவையில் பேசிய அதிமுக எம்பி வேணுகோபால், மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது என இருநாட்டு பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட உடன்பாட்டை இலங்கை கடற்படை மீறி இருப்பதாகக் கூறினார். ஒரு வாரத்தில் 50 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மீன்பிடி படகுகள் கைப்பற்றப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். அவரை அடுத்து பேசிய அதிமுக எம்பி ஏழுமலை, பிரதமர் மோடி மீனவர் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கச்சத்தீவை மீட்க வேண்டும் எனவும் கோரினார்.
அதேசமயம், வெளியுறவுத்துறை இணை அமைச்சர் எம்ஜே.அக்பரை , திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா சந்தித்து, மீனவர் கொல்லப்பட்டது தொடர்பான பேசினார். இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுப்பதாக மத்திய அரசு உறுதி அளித்திருப்பதாக அவர் தெரிவித்தார்.