ஒகி புயலால் கடலுக்கு சென்று காணாமல் போன மீனவர்கள் கரை திரும்ப வேண்டி நூற்றுக்கணக்கான மீனவ மக்கள் மெழுகு வர்த்தி ஏந்தி நெல்லையில் பேரணி நடத்தினர்.
நெல்லை மாவட்டம் உவரியில் ஒகி புயலால் கடலில் உயிர்நீத்த உறவுகளுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தும் விதமாக மெழுகுவர்த்தி ஏந்தி மௌன ஊர்வலம் நடைபெற்றது. அத்துடன் புயலினால் சிக்கி தவித்து கொண்டு இருப்பவர்கள் விரைவில் கரை திரும்ப வேண்டும் என்பதற்காகவும், புயலில் சிக்கி உயிரிழந்தவர்களின் ஆன்மா இறைவனோடு சேர வேண்டும் என்பதற்காகவும் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. திருப்பலி நிறைவேற்றிய பிறகு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உவரி அந்திரேயா ஆலயத்தில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக கையில் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம் சென்றனர்.
பின்னர் அந்தோணியர் ஆலயம் அருகில் உள்ள கடலில் கையில் ஏந்தி வந்த மெழுகுவர்த்தியையும், பூக்களையூம் கடலில் தூவி உறவுகளை இழந்து தவித்து கொண்டு இருக்க கூடிய குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை காணிக்கையாக்கினர். உயிரிழந்த மீனவர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் வழங்குவதாக அரசு அறிவித்து உள்ளது. அந்த நிதி உதவி போதாது என்றும், இன்னும் அதிகப்படுத்தி கொடுக்க வேண்டும் என்றும் மீனவர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.