காணாமல் போன மீனவர்களை மீட்க வலியுறுத்தி கன்னியாகுமரி மீனவ கிராம மக்கள் கண்களில் கறுப்புத்துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஒகி புயலின் போது கடலில் சிக்கி தவித்து வரும் மீனவர்களை மீட்க வலியுறுத்தி கடந்த 10 நாட்களுக்கு மேலாக கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கன்னியாகுமரி மாவட்டத்தின் இரவிப்புத்தன்துறையில் 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்று கூடி இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இரயுமன்துறை, பூத்துறை, தூத்தூர், சின்னத்துறை, இரவிப்புத்தன்துறை கிராம மக்கள் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர். இந்தப் போராட்டத்தில் கண்களில் கறுப்புத்துணி கட்டியபடி போராட்டத்தில் நூற்றுக்கணக்கான பெண்களும் பங்கேற்றனர்.
ஒகி புயலில் காணாமல் போன மீனவர்களை மீட்க வேண்டும், உயிரிழந்த மீனவர் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம், குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணி வழங்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.