கன்னியாகுமரியில் ஒகி புயலின் போது கடலில் சிக்கி காணமல் போன மீனவர்களை மீட்க வலியுறுத்தி குழித்துறை ரயில் நிலையத்தில் 12 மணி நேரத்துக்கும் மேலாக, மீனவர்கள் நடத்தி வந்த மறியல் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது.
கன்னியாகுமரியில் இருந்து மீன்பிடிக்க சென்ற 1000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்களை காணவில்லை என நீரோடி, மார்த்தாண்டம்துறை, வள்ளவிளை இரவிபுத்தன்துறை, சின்னத்துறை, தூத்தூர், பூத்தூறை, இரயுமந்துறை ஆகிய 8 மீனவ கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, நேற்று காலை 9 மணி அளவில் பேரணியாக புறப்பட்டு 15 கிலோ மீட்டர் நடந்து வந்த மீனவர்கள், நண்பகல் 12 மணி முதல் குழித்துறை ரயில் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாலையில் மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், அவரை ரயில்வே அலுவலகத்திலேயே மீனவர்கள் சிறை பிடித்தனர்.
சுமார் 2 மணி நேரத்திற்கு பிறகு வெளியே வந்த மாவட்ட ஆட்சியர் சஜன் சிங் சவான், மீனவப் பிரதிநிதிகள் முதல்வர் பழனிசாமியை சந்திக்க ஏற்பாடு செய்யப்படும் என உறுதி அளித்தார். மேலும், மீனவர்களை மீட்கும் பணி துரிதமாக நடைபெறும் என்றும் ஆட்சியர் உறுதி அளித்தார். இதனை நள்ளிரவு 12 மணியளவில், பங்குத்தந்தைகள் மீனவர்களிடம் எடுத்துக் கூறினர். இதையேற்று மீனவர்கள் அனைவரும் கலைந்துச் சென்றனர். இதையடுத்து, போராட்டத்தால் நீண்டநேரமாக நிறுத்தப்பட்டிருந்த குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டுச் சென்றது.