வேலைநிறுத்தப் போராட்டத்தை திரும்பப்பெற்றதையடுத்து நாகை, காரைக்கால் மீனவர்கள் கடலுக்குச் சென்றனர்.
டீசல் விலை உயர்வைக் கண்டித்தும் விசைப்படகுகளுக்கு வழங்கப்படும் மானிய டீசலை உயர்த்தி வழங்க வலியுறுத்தியும், கடற்கரை பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், நாகை மற்றும் காரைக்கால் மாவட்ட மீனவர்கள் கடந்த 10 நாட்களாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த கோரிக்கைகளுடன் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதையடுத்து நடந்த நாகை காரைக்கால் மாவட்ட மீனவர்களின் ஆலோசனைக் கூட்டத்தில், வேலைநிறுத்தத்தை திரும்பப் பெறுவது என்று முடிவெடுக்கப்பட்டது. பத்து நாட்களுக்குள் அரசு பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கும் என்று நம்பிக்கை தெரிவித்த மீனவர்கள், கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வரும் 2 ஆம்தேதி தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவதென முடிவு செய்துள்ளனர். இதையடுத்து வேலைநிறுத்தத்தை திரும்பப்பெற்ற நாகை, காரைக்கால் மாவட்ட மீனவர்கள், கடலுக்கு மீன்பிடிக்கச்சென்றனர்.