அசைவப்பிரியர்களுக்கு அதிருப்தி அளிக்கும் விதமாக சிக்கன், மட்டன் விலையுடன் கடல் உணவுகளின் விலையும் உச்சத்திலேயே இருக்கிறது.
சென்னையில் ஒரு கிலோ ஆட்டிறைச்சி 700 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ கோழி இறைச்சி 250 ரூபாயாக இருக்கிறது. இறைச்சி விலை அதிகம் உள்ள நிலையில், மீன், நண்டு போன்ற கடல்வாழ் உயிரினங்களின் விலையாவது குறையாக இருக்குமா என்று பார்த்தால் அதன் விலையும் அதிகரித்தே காணப்படுகிறது.
மீன்பிடி தடைக்காலம் கடந்த 15-ஆம் தேதியுடன் முடிந்துவிட்டாலும், மீன்களின் விலை தடைக்காலத்தில் இருந்தது போலவே அதிகரித்தே இருக்கிறது. வஞ்சரம் கிலோ 600 ரூபாய்க்கும், சங்கரா மீன் 250 ரூபாய்க்கும், வவ்வால் மீன் கிலோ 500 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. தேங்காய்பாறை கிலோ 300 ரூபாய்க்கும், இறால், கிலோ 350 ரூபாய்க்கும், நண்டு, கிலோ 300 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. மீன்களின் வரத்து குறைவாக இருப்பதாலேயே விலையும் அதிகரித்துள்ளதாக மீன் விற்பனையாளர்கள் கூறுகின்றனர். சிக்கன், மட்டன் விலை மட்டுமில்லாமல் மீன் விலையும் அதிகரித்தே இருப்பதால் அசைவப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.