செய்தியாளர்: காமராஜ்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு விக்கிரவாண்டி அருகேயுள்ள வி.சாலையில் வரும் 23-ஆம் தேதி நடத்த திட்டமிட்டு, அதற்காக காவல்துறை அனுமதி கேட்கப்பட்டது. இதற்கு காவல்துறை சார்பில் மாநாடு நடத்த 21 கேள்விகள் முன்வைக்கப்டன. இதற்கான பதில் விளக்கத்தை விழுப்புரம் டிஎஸ்பி சுரேஷிடம் தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வழங்கியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழக முதல் அரசியல் மாநாடு நடத்த விக்கிரவாண்டி அருகேயுள்ள வி.சாலையில் 85 ஏக்கர் பரப்பளவில் இடம் தேர்வு செய்யப்பட்டு விழுப்புரம் எஸ்பி அலுவலகத்தில் கடந்த 28-ஆம் தேதி அக்கட்சியின் பொதுசெயலாளர் என்.ஆனந்த் நிர்வாகிகளுடன் சென்று மனு அளித்தார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் மூலம் கொடுக்கப்பட்ட மனுவில் மாநாடு ஏற்பாடுகள் குறித்து குறிப்பிடவில்லை என்பதால் மாநாடு நடத்துவதற்கான நடைமுறை ஏற்பாடுகள் குறித்து விளக்கமளிக்க வேண்டுமென காவல்துறை சார்பாக 21 கேள்விகள் முன்வைக்கப்பட்டன.
21 கேள்விகள் அடங்கிய நோட்டீஸை கடந்த 2 ஆம் தேதி விக்கிரவாண்டி காவல் உதவி ஆய்வாளர் காத்தமுத்து மூலமாக டிஎஸ்பி சுரேஷ், தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளரிடம் வழங்கினர். இதற்கான பதில் மனுவை ஐந்து தினங்களுக்குள் வழங்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்ட நிலையில்,. நேற்றுடன் காவல்துறை சார்பில் வழங்கப்பட்ட கால அவகாசம் முடிவடைவதால் அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் டிஎஸ்பி சுரேஷிடம் 21 கேள்விகளுக்கு பதிலளித்து மனுவாக வழங்கினர். அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய பதில்களை விரிவாக பார்க்கலாம்....
தமிழக வெற்றிக் கழகம் சார்பாக டிஎஸ்பி சுரேஷிடம் வழங்கப்பட்டுள்ள பதில் மனுவில்...
1.மாநாடு நடைபெறும் இடம் முழுவதும் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்படும்.
2. 2 கிலோமீட்டர் தொலைவில் இருந்து கொடிகள் கட்டப்படும். மாநாடு நடைபெறும் இடத்தில் 70-க்கும் மேற்பட்ட பேனர்கள் அமைக்கப்படும்.
3.மாநாடு நடைபெறும் இடத்தில் பெரிய கொடி கம்பத்தில் விஜய் கொடி ஏற்றுகிறார்.
4. இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்த தனித் தனி இடம் ஒதுக்கீடு (வட மாவட்டம் மற்றும் தென் மாவட்டம் என இரு பகுதிகளாக தனி இடம் அமைக்கப்பட உள்ளது).
5. தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு தமிழகத்திலுள்ள 38 மாவட்டங்களில் ஒவ்வொரு மாவட்டங்கள் வீதம் 600 ஆண்கள், 300 பெண்கள், 100 முதியவர்கள் என தோராயமாக மாவட்டத்திற்கு 1000 நபர்கள் வருகை தர உள்ளார்கள். இதில்,
வேன்கள் - 250
பேருந்துகள் - 100
கார்கள் - 250
இருசக்கர வாகனங்கள் -1000
6. 85 ஏக்கர் நிலப்பரப்பில் நடைபெற உள்ள இந்த மாநாடு நண்பகல் 2 மணி முதல் இரவு 10 மணி வரை நடத்த அனுமதி கோரப்பட்டுள்ளது.
7. மாநாட்டில் பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கி நிறுவனம் ஜேபி எண்டர் பிரைஸஸ் மூலமாக ஆடியோ போடப்படுகிறது.
8. மாநாட்டிற்கு கலந்து கொள்பவர்களுக்கு இருக்கைகள் விவரம் ஆண்கள் - 30,000, பெண்கள் - 15,000, முதியவர் - 5000, மாற்றுத் திறனாளிகளுக்கு 500 இருக்கைகள். குழந்தைகளுக்கு அனுமதி இல்லை.
11.மாநாட்டிற்கு வரும் வாகனங்கள் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா? அந்த இடத்தின் உரிமையாளர் யார்? அவரிடம் அனுமதி பெறப்பட்டுள்ளதா? என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள தவெக
1.ஆம். வாகனம் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
2. இடத்தின் உரிமையாளர் பெயர் ராஜேஷ்குமார். ஜனனி ஹோம்ஸ் என 5 ஏக்கர் நிலம் வாகன நிறுத்தத்திற்கு தயார் செய்யப்பட்டுள்ளது.
12. மாநாட்டில் வாகனங்கள் நிறுத்துமிடங்களில் பாதுகாப்புப் பணிக்கு தனியார் பாதுகாவலர்கள் அல்லது தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்படுவார்களா? அவர்களின் பெயர் விவரம் மற்றும் சீருடை விவரம்?
1) தனியார் பாதுகாவலர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளார்கள்.
2) இப்பணியில் திரு.மு.விக்னேஷ்வரன் மற்றும் திரு.மோகன் ஆகியோர் தலைமையில் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள்.
3) மஞ்சள், சிவப்பு சீருடையில் இருப்பார்கள்.
13. மாநாட்டில் கலந்து கொள்ளும் பெண்கள், குழந்தை மற்றும் முதியவர்களுக்கு பாதுகாப்பு வசதிகள் செய்யப்படவுள்ள விவரம்.
குழந்தைகளுக்கு அனுமதி இல்லை. பெண்கள் மற்றும் முதியவர்களுக்கு தனியாக இருக்கைகள் அமைக்கப்பட உள்ளன.
14.மாநாட்டில் கலந்துகொள்ளும் நபர்களுக்குச் செய்யப்பட உள்ள அடிப்படை வசதிகளின் விவரம் மற்றும் வழங்கப்படும் குடிதண்ணீர், பாட்டில் வகையா அல்லது தண்ணீர் டேங்க் மூலமாகவா? (குடிநீர், கழிப்பிடம்... இதர..)
1. குடிநீர் பாட்டில் மற்றும் தண்ணீர் டேங்க் வாயிலாகவும் குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. 250 தற்காலிகக் கழிப்பிடம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
100 ஆண்கள் கழிவறைகள்,
150 பெண்கள் கழிவறைகள் அமைக்கப்படும்.
15. மாநாட்டிற்கு வரும் நபர்களுக்கு உணவு, பொட்டலங்கள் மூலம் விநியோகிக்கப்படவுள்ளதா? அல்லது மாநாடு நடைபெறும் இடத்தின் அருகே சமையற்கூடம் மூலம் சமைத்து விநியோகிக்கப்பட உள்ளதா?
சுகாதாரமான முறையில் உணவுக்கூடம் அமைத்து, பார்சல் முறையில் உணவு விநியோகிக்கப்படும்.
16.மாநாட்டில் தீவிபத்து தவிர்க்கும் வகையில் பாதுகாப்பு செய்யப்படவுள்ள விவரம்.
1.தீயணைப்புத் துறை மூலமாக பாதுகாப்பு வழங்க மனு அளிக்கப்பட்டுள்ளது.
2.மேலும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளுக்கான வாகனங்கள் மற்றும் உபகரணங்கள் அமைக்கப்படும்.
17.மாநாட்டில் கலந்துகொள்ளும் நபர்களுக்கு மருத்துவ வசதிகள் ஏற்பாடு செய்யப்பட உள்ளதா? அவ்வாறு செய்யப்பட இருப்பின் மருத்துவக் குழு மற்றும் ஆம்புலன்ஸ் விவரங்கள்.
1.மருத்துவக் குழு மற்றும் ஆம்புலன்ஸ் வசதி ஏற்பாடு செய்ய, சுகாதாரத் துறையிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
2.தனியார் மருத்துவர்கள் மற்றும் உபகரணங்கள் வரவழைக்கப்பட்டு, பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
18. மாநாட்டில் கலந்துகொள்ள வரும் நபர்கள் உள்ளே மற்றும் வெளியே செல்லும் வழித்தடங்கள் எத்தனை?
மாநாட்டு பந்தலுக்கு வந்து செல்ல வசதியாக 14 வழிகள் அமைக்கப்படவுள்ளன.
19. கட்சியின் தலைவர் மற்றும் முக்கிய நபர்கள் விழா மேடைக்குச் செல்லும் வழித்தடம் பற்றிய விவரம்,
தலைவர்கள் மேடைக்கு வந்து செல்ல தனியாக 4 வழிகள் அமைக்கப்பட உள்ளன
20. மாநாட்டிற்கு வரும் வாகனங்கள் நிறுத்தும் ஒவ்வொரு இடத்திற்கு உள்ளே மற்றும் வெளியே செல்லும் வழித்தடங்கள் எத்தனை?
இதற்கு தனியாக 5 - 6 வழிகள் அமைக்கப்படும்
21. மாநாட்டிற்கு பயன்படுத்தப்படும் மின்சாரம் எங்கிருந்து பெறப்படுகிறது?
ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் பெற்று பயன்படுத்தப்படும்.
மேற்கண்ட விளக்கத்தை ஏற்றுக் கொண்டு மாநாடு நடத்த உரிய அனுமதியை வழங்கிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.