சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் தனியார் உணவகத்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய வழக்கறிஞர் உள்ளிட்ட இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் உணவகத்தில் கடந்த மூன்று நாட்களாக வழக்கறிஞர் மாதவன் என்பவர் தங்கியுள்ளார். இந்நிலையில் இன்று காலை மாதவன் ஹோட்டலில் வேலை செய்பவர்களிடம் சைவ உணவு கேட்டிருக்கிறார். ஆனால் விடுதி நிர்வாகம் அசைவ உணவு கொடுத்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர், ஹோட்டல் மேலாளர் சங்கரலிங்கத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது. ஆனால் குறி தவறியதால், குண்டு அருகில் இருந்த கார் மீது பட்டு கண்ணாடி சேதமடைந்தது.
துப்பாக்கிச்சூடு நடத்தியபோது வழக்கறிஞர் மாதவன் மது அருந்தி இருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து உணவக மேலாளர் சங்கரலிங்கம் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த கேளம்பாக்கம் காவல்துறையினர், கொலை முயற்சி உள்ளிட்ட நான்கு வழக்குகளின் கீழ் வழக்கறிஞர் மாதவன், அவரது நண்பர் முத்துராஜ் ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவரிடம் இருந்த கைத்துப்பாக்கி மற்றும் 49 தோட்டாக்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். வழக்கறிஞர் மாதவனிடம் துப்பாக்கி வைத்துக் கொள்வதற்கான உரிமம் உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.