கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பட்டாசு கடையில் நேர்ந்த தீ விபத்து தொடர்பாக கடையின் உரிமையாளர் செல்வகணபதி மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அண்ணாநகர் பகுதியில் செல்வகணபதி என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இவர், தீபாவளி பண்டிகையை ஒட்டி அதே கடையில் பட்டாசு வியாபாரம் செய்வதற்கான உரிமம் பெற்றுள்ளார். இதனையடுத்து பட்டாசு விற்பனைக்காக செல்வகணபதி தனக்கு சொந்தமான மளிகைக் கடையின் மேல் தளத்தில் சிவகாசியிலிருந்து பட்டாசுகளை வாங்கி இருப்பு வைத்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை திடீரென செல்வகணபதியின் கடையில் இருந்த பட்டாசுகள் தீப்பிடித்து பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் சிக்கி 11 வயது சிறுவன் தனபால் உட்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சங்கராபுரம் கிராம நிர்வாக அலுவலர் வரதராசன் அளித்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
காவல் துறையினரின் விசாரணையில் பட்டாசு கடை உரிமையாளர் செல்வகணபதி பல்வேறு விதி மீறல்களில் ஈடுபட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து இந்திய வெடிபொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் பட்டாசு கடை உரிமையாளர் செல்வகணபதி மீது விதிமீறல்கள் வெடிக்கும் தன்மை கொண்ட பொருட்களை அலட்சியமாக கையாளுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் சங்கராபுரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த விபத்தில் லேசான காயமடைந்த கடையின் உரிமையாளர் செல்வகணபதி தற்போது கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.