பட்டாசு ஆலைகளுக்கான புதிய விதிமுறையை நீக்கக்கோரி விருதுநகரில் 10வது நாளாக காலவரையற்ற வேலைநிறுத்தம் நீடிக்கிறது. இதனால் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் முழுவதுமுள்ள 814 பட்டாசு ஆலைகள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட பட்டாசு கடை உரிமையாளர்கள், காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் 3 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி இருக்கிறது. 10 நாளுக்கு மேலாக வேலையின்றி இருப்பதால் வறுமையின் பிடியில் வாழ்வு நகர்வதாகவும் ஒவ்வொரு நாளும் சுமைகள் ஏறிக்கொண்டே செல்வதால் அதைத் தாங்க முடியாமல் தவிப்பதாகவும் குமுறுகின்றனர் தொழிலாளர் கள்.
பட்டாசு கடையை சுற்றிலும் 15 மீட்டர் தூரத்துக்கு வேறு பட்டாசு கடைகள் இருக்கக் கூடாது.பொதுமக்கள் கூடும் எந்தவித கட்டடங்களும் இருக்கக்கூடாது, கடையில் மேற்புற மாடி இருக்கக்கூடாது, கடையின் வேறொரு பக்கத்தில் நான்கு அடி அகலத்துக்கு அவசர வழி கட்டாயம் என நீளுகின்றன புதிய விதிமுறைகள்.
பட்டாசு சார்ந்த பணிகளில் ஈடுபடும் பல கோடி பேர் வேலையிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் மத்திய அரசு புதிய வரைவு விதிமுறையை நீக்குவதற்கு உரிய நடவடிக்கை எடுத்து தீபாவளிக்கு முன் தீபஒளி ஏற்றவேண்டும் என்பது தொழிலாளர்களின் கோரிக்கையாக இருக்கிறது.