செய்தியாளர்: ஆவடி நவீன்குமார்
பூந்தமல்லி அடுத்த கோளப்பன்சேரி பகுதியில் தனியாருக்கு சொந்தமான குடோன் உள்ளது. இந்த குடோனில், அலுவலகம் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நேற்று மாலை திடீரென குடோனில் இருந்த பொருட்கள் தீப்பிடித்து எரியத் தொடங்கின. இதனை கண்டதும் அங்கு தங்கியிருந்த ஊழியர்கள் வெளியே ஓடி வந்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பூந்தமல்லி தீயணைப்புத் துறை வீரர்கள் தீயை அனைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் தீ வேகவேகமாக அடுத்தடுத்து பரவிய நிலையில், கூடுதலாக கிண்டி, அம்பத்தூர், ஆவடி, கொருக்குப்பேட்டை வியாசர்பாடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கூடுதலாக 12 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் அருகே இருந்த மற்றொரு ஆயில் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் வைத்திருந்த குடோன்கள் தீப்பிடித்து எரியத் துவங்கியது.
இதனால், அந்தப் பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்து. இதையடுத்து சுமார் ஆறு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் சுமார் 1.5 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகி இருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், தீ விபத்திற்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என வெள்ளவேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.