திருவள்ளூர்: நள்ளிரவில் பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து

செங்குன்றம் அருகே பிளாஸ்டிக் குடோனில் நேற்று நள்ளிரவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 20-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன.
Fire Accident
Fire Accidentpt desk
Published on

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த லட்சுமிபுரம் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்கும் குடோன் உள்ளது. இங்கு சுமார் 10-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். பிளாஸ்டிக் கழிவுகளை தரம் பிரித்து விற்பனை செய்து வரும் இந்த பிளாஸ்டிக் குடோனில் நேற்று நள்ளிரவில் திடீரென ஏற்பட்ட தீ மளமளவென பரவியது.

Fire accident
Fire accidentpt desk

இது குறித்து அளிக்கப்பட்ட தகவலின் பேரில் செங்குன்றம், மாதவரம், அம்பத்தூர், ஆவடி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட தீயணைப்பு நிலையங்களில் இருந்து வந்த 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பிளாஸ்டிக் பொருட்கள் என்பதால் தீ மளமளவென பரவி அந்தப் பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ளது. தீயணைப்பு வீரர்கள் தண்ணீர் மற்றும் ரசாயன நுரையை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

அந்தப் பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ளதால் சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் பிளாஸ்டிக் குடோனின் ஒரு பக்கத்தில் உள்ள தடுப்புகளை இடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் 10-க்கும் மேற்பட்ட சென்னை குடிநீர் வாரிய லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Fire accident
Fire accidentpt desk

இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பிலாஸ்டிக் பொருட்கள் எரிந்து சேதமடைந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இரவு நேரம் என்பதால் இந்த பிளாஸ்டிக் குடோனில் ஊழியர்கள் யாரும் உள்ளே இல்லை எனவும், தீக்காயமோ, உயிர்சேதமோ ஏதும் ஏற்படவில்லை எனவும், தீ முழுமையாக அணைக்கப்பட்ட பின்னரே தீ விபத்திற்கான காரணம் தெரியவரும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com