செய்தியாளர்: மணிகண்டபிரபு
மதுரை மாநகர் பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள கட்ராபாளையம் தெரு பகுதியில் விசாகா என்ற பெண்கள் தங்கு விடுதி கடந்த சில ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இதில் மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 45க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கி பணிபுரிந்து படித்து வருகின்றனர். இந்நிலையில், இன்று காலை 4 மணியளவில் விடுதியில் இருந்து கரும்புகை வெளியேறியது.
உடனடியாக அருகில் உள்ளவர்கள் தீயணைப்புதுறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் புகை வெளியே வந்த விடுதிக்குள் சென்று இரண்டு மணி நேரத்துக்கு மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இந்நிலையில், விடுதியில் இருந்த குளிர்சாதனப்பெட்டி (பிரிட்ஜ்) வெடித்து அதில் உள்ள சிலிண்டர் மூலமாக நச்சுப் புகை வெளியேறியது தெரியவந்துள்ளது. இதில் 5 பேர் மயங்கி விழுந்த நிலையில் பரிமளா என்ற ஆசிரியையும், சரண்யா என்ற பெண்ணும் உயிரிழந்தனர். விடுதி வார்டன் புஷ்பா, செவிலியர் கல்லூரி மாணவி ஜனனி, சமையலர் கனி ஆகிய 4 பேரை எல்லிஸ்நகர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மேலும், 4 பெண்கள் மூச்சுத்திணறல் காரணமாக அரசு இராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
உயிரிழந்த இருவரின் உடல் அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்விற்காக வைக்கப்பட்டுள்ளது. மேலும், 3 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்தில் பாதிக்கப்பட்டுள்ள புஷ்பா என்பவர் லீசுக்கு எடுத்து இந்த விடுதியை நடத்தி வந்துள்ளார். பழமையான கட்டடம் என இரண்டு ஆண்டுகளுக்கு முன் மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்ட நிலையில் அதையும் மீறி விடுதி செயல்பட்டு வந்ததாக சொல்லப்படுகிறது. இந்த விபத்து தொடர்பாக, காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், விடுதி உரிமையாளர் இன்பா என்ற பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.