சென்னை மயிலாப்பூர் சாய்பாபா கோயிலில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக கோயிலின் கோபுரத்தை சுற்றி ஓலை மறைப்பு அமைக்கப்பட்டிருந்தது. இதனிடையே நேற்று கோயில் அருகாமையில் உள்ள வீடுகளில் பட்டாசுகள் வெடித்து தீபாவளி கொண்டாட்டத்தில் மக்கள் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது பட்டாசு தீப்பொறி, கோயில் கோபுரத்தை மறைத்து அமைக்கப்பட்டிருந்த ஓலையின் மீது விழுந்து தீப்பிடித்தது. தொடர்ந்து தீ மளமளவென ஓலை கீற்றின் மற்ற பகுதிகளுக்கும் பரவி பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து நிகழ்விடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் கோயில் கோபுரத்தை சுற்றி அமைக்கப்பட்டிருந்த ஓலை கீற்றில் பற்றிய தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தீ ஏற்படும் பகுதிகள் என கணித்து முன்னெச்சரிக்கையாக லஸ் கார்னர் பகுதியில் தீயணைப்பு வாகனம் நிறுத்தப்பட்டிருந்ததால் தீ உடனே கட்டுப்படுத்தப்பட்டதாக மயிலாப்பூர் தீயணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்