சென்னை அண்ணா சாலையில் உள்ள உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் இன்று காலை 6 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டது.
சென்னை அண்ணா சாலை தர்கா அருகே உதவி மின் பொறியாளர் அலுவலகம் மற்றும் துணை மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இன்று காலை அங்கு ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் பத்துக்கும் மேற்பட்ட கணினிகள் மற்றும் மின் நுகர்வோரின் தகவல்கள் எரிந்து தீக்கிரை ஆகின. உடனடியாக விரைந்து சம்பவ இடத்துக்கு சென்ற ஐந்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தன. நல்வாய்ப்பாக அருகில் இருந்த துணை மின் நிலையத்தில் தீ விபத்து ஏற்படவில்லை. இதன் காரணமாக இந்த துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மின்தடை எதுவும் ஏற்படவில்லை.
இது குறித்து தமிழக மின்சார வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானியிடம் கேட்டபோது, “தீ விபத்தால் மின்சார வாரிய ஊழியர்கள் யாருக்கும் காயமோ உயிர் சேதமோ ஏற்படவில்லை. இதற்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம்” என தெரிவித்தார்.
இதையும் படிக்கலாமே: பில்கிஸ்பானோ வழக்கு குற்றவாளிகள் விடுதலை: மத்திய அமைச்சரின் ஆதரவும், மஹுவாவின் எதிர்ப்பும்