அபராதமே ரூ.908 கோடியா..! திமுகவின் பணக்கார நிர்வாகி.. யார் இந்த ஜெகத்ரட்சகன்?

சட்டவிரோத பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக, திமுக கொள்கை பரப்புக்குழு செயலாளரும் அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெகத்ரட்சகனுக்கு, 908 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது அமலாக்கத்துறை.
ஜெகத்ரட்சகன்
ஜெகத்ரட்சகன்pt web
Published on

ரயில்வேதுறை ஊழியர் டூ அரசியல்வாதி

சட்டவிரோத பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக, திமுக கொள்கை பரப்புக்குழு செயலாளரும் அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெகத்ரட்சகனுக்கு, 908 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது அமலாக்கத்துறை. மேலும், 89 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. எதனால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதைப் பார்ப்பதற்கு முன்பாக, யார் இந்த ஜெகத்ரட்சகன் என்பதைப் பார்ப்போம்..,

ஜெகத்ரட்சகன்
ஜெகத்ரட்சகன்pt web

விழுப்புரம் மாவட்டம் கலிங்கமலைதான் ஜெகத்ரட்சகனின் சொந்த ஊர். எஸ்.எஸ்.எல்.சி வரை படித்த ஜெகத்ரட்சகன் ரயில்வே துறையில் ஊழியராகப் பணியாற்றியவர். தொடர்ந்து, அரசியலில் இறங்க முடிவு செய்தார். இன்று திமுகவின் முன்னணித் தலைவர்களுள் ஒருவராகப் பார்க்கப்படும் ஜெகத்ரட்சகன், தன் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கியது என்னவோ அதிமுகவில்தான். 1980-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், உத்திரமேரூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று முதல்முறை எம்.எல்.ஏவானார். எம்.ஜி.ஆரின் வலதுகரமாக இருந்த ஆர்.எம்.வீரப்பனுடனும் மிகவும் நெருக்கமானார். தொடர்ந்து, 1984 ஆம் ஆண்டில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் செங்கல்பட்டு தொகுதியில் போட்டியிட்டு, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளரைவிட ஐம்பதாயிரம் வாக்குகள் அதிகம் பெற்று எம்.பியானார். அப்போது, அதிமுக மக்களவைத் தலைவராகவும் ஜெகத்ரட்சகன் இருந்தார்.

ஜெகத்ரட்சகன்
தேசிய விளையாட்டுத் தினம்| தற்காப்பு கலை பயிற்சி.. வீடியோவைப் பகிர்ந்த ராகுல் காந்தி!

அரசியலில் ஒதுங்கி இருந்த சில காலம்

எம்ஜி.ஆர் மறைவுக்குப்பிறகு, அதிமுக ஜெ அணி, ஜா அணி என இரண்டாகப் பிளவுற்றபோது, ஜா அணியில் இருந்தார் ஜெகத்ரட்சகன். தொடர்ந்து, 1989-ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில், மீண்டும் உத்திரமேரூர் தொகுதியில் போட்டியிட்டு சொற்பமான வாக்குகளைப் பெற்று படுதோல்வியடைந்தார். பிறகு அதிமுகவில் இரண்டு அணிகளும் ஒன்றானது. ஆனால், ஜெகத்ரட்சகன் அரசியலில் இருந்து ஒதுங்கியே இருந்தார்.

அதிமுகவில் இருந்து ஆர்.எம்.வீரப்பன் நீக்கப்பட்டு, அவர் எம்.ஜி.ஆர் கழகத்தைத் தொடங்கியபோது, அதன் பொதுச் செயலாளர் ஆனார் ஜெகத்ரட்சகன். 1999 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக, பாஜக உள்ளடக்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றுபெற்று எம்.பியானார். தொடர்ந்து, 2001-ம் ஆண்டு, வன்னிய சமூக மக்களிடம் கல்வி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பின்தங்கிய மாணவர்களுக்கு உதவவும் வீரவன்னியர் பேரவை என்னும் அமைப்பைத் தொடங்கி தனியாக நடத்தி வந்தார். அது பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸுக்கு எதிரான அரசியல் நகர்வாகப் பார்க்கப்பட்டது. 2004 தேர்தலில், திமுக கூட்டணியில் அவருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதற்கு பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸே காரணம் என ஜெகத்ரட்சகன் கட்சி நிர்வாகிகள் குற்றம் சாட்டினர்.

ஜெகத்ரட்சகன்
"வாழையடி சிறுகதை அருமை! எழுத்தாளர் சோ.தர்மனுக்கு நன்றி" தனது பாணியில் ரிப்ளை கொடுத்த மாரி செல்வராஜ்!

திமுகவில் ஐக்கியம்

2004 ஆகஸ்ட் மாதம் ஜனநாயக முன்னேற்றக் கழகம் எனும் கட்சியைத் தொடங்கி நடத்தி வந்தார். பின்னர் அந்தக் கட்சியை, 2009 மார்ச் 29-ம் தேதி, திமுக தலைவர் கருணாநிதி முன்னிலையில் திமுகவுடன் இணைத்தார். அன்று முதல் திமுக உறுப்பினரான ஜெகத்ரட்சகனுக்கு., 2009 நாடாளுமன்றத் தேர்தலில், அரக்கோணம் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்பட்டது. பாமக வேட்பாளர் வேலுவைத் தோற்கடித்து மீண்டும் எம்.பியானார். அப்போதைய மன்மோகன் சிங் அமைச்சரவையில், தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை இணை அமைச்சரானார். 2012 -லிருந்து வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணையமைச்சரானார். தொடர்ந்து, 2014 தேர்தலில், ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த ஜெகத்ரட்சகன், 2019 மற்றும் 2024 இரண்டு தேர்தலிலும் அரக்கோணம் தொகுதியில் போட்டியிட்டு எம்.பியாக வெற்றிபெற்றார்.

jagathrakshakan
jagathrakshakanfile image

இது ஒருபுறமிருக்க, 1980-களில் கல்வி நிறுவனத்தையும் தொடங்கி நடத்திவந்த ஜெகத்ரட்சகன், 2004 ம் ஆண்டில் அதை மிகப்பெரிய அளவில் விரிவுபடுத்தினார். உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் ஏராளமான தொழில்களையும் நடத்திவருகிறார். திமுகவின் மிகப் பணக்கார நிர்வாகியாகப் பார்க்கப்படுபவர் ஜெகத்ரட்சகன். மிகத் தீவிர பெருமாள் பக்தரான ஜெகத்ரட்சகன், ஆழ்வார் பண்பாட்டு மையம் எனும் வைணவ அமைப்பையும் நடத்திவருகிறார். மிகச் சிறந்த தமிழ் ஆர்வலர், சொற்பொழிவாளர் என்கிற பெருமைகளும் ஜெகத்ரட்சகனுக்கு உண்டு. அதேவேளை, ஊழல், முறைகேடு புகார்களும் ஜெகத்ரட்சகனைத் தொடர்ந்துகொண்டேதான் வருகிறது.

ஜெகத்ரட்சகன்
ஆந்திரா| ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மாநிலங்களவை எம்பிக்கள் 2 பேர் ராஜினாமா.. ஜெகனுக்கு மேலும் பின்னடைவு!

ரூ.908 கோடி அபராதம்

2020-ல் ஜெகத்ரட்சகன், அவரது குடும்பத்தினர் மற்றும் தொடர்புடையை இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. அப்போது ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான ரூ.89.19 கோடி மதிப்பிலான சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து, 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பறிமுதல் உத்தரவு ரத்து செய்யப்பட்டது. பின்னர் அமலாக்கத் துறை நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதையடுத்து, 2021-ம் ஆண்டு டிசம்பரில், சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ், ஜெகத்ரட்சகன், அவரது குடும்பத்தினர், தொடர்புடையை நிறுனங்கள் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் விதிகளை மீறி பல்வேறு முதலீடுகள் செய்திருப்பதாக நீதிமன்றத்தில், அமலாக்கத்துறையால் குற்றம் சாட்டப்பட்டது.

குறிப்பாக, சிங்கப்பூரில் போலி நிறுவனங்கள் மூலம் ரூ.42 கோடியும் இலங்கை நிறுவனத்தில் ரூ.9 கோடி முதலீடு செய்து சட்டவிரோத பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக, ஜெகத்ரட்சகன் 2020-ம் ஆண்டு கைப்பற்றப்பட்ட சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும் என நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, பல்வேறு தேதிகளில் விசாரணைக்கு ஆஜராகும் படி, ஜெகத்ரட்சகனுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதையடுத்து, அவரது வழக்கறிஞர்கள் ஆஜராகி விளக்கம் அளித்தனர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் சொத்துகளை பறிமுதல் செய்ய உத்தரவிட்டது. அந்த வகையில், சட்டவிரோத பணப் பரிவர்த்தனையில் குற்றம்சாட்டப்பட்ட ஒவ்வொரு விதி மீறல்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. அதன்படி ரூ.908 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் கைப்பற்றப்பட்ட ரூ.89.19 கோடி மதிப்பிலான சொத்துகள் பறிமுதல் செய்யப்படுவதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

ஜெகத்ரட்சகன்
ஆவடி|கடனிலிருந்து தப்பிக்க இப்படி ஒரு நாடகமா? தமிழக போலீசாரை ராஜஸ்தான் வரை அலைக்கழித்த நபர்கள் கைது!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com