திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்துள்ள கந்தம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சோமசுந்தரம் (34). திருப்பூர் அருகே அண்ணாநகர் பகுதியில் சொந்தமாக பனியன் கம்பனி நடத்தி வரும் சோமசுந்தரம், அவிநாசியை அடுத்து கந்தம்பாளையம் பகுதியில் சொந்தமாக வீடு கட்ட கடந்த 2017-ம் ஆண்டு, திருப்பூர் DHFL (DIWAN HOUSING FINANCE LIMITED) தனியார் நிதி நிறுவனத்தில் 30 வருட கால அவகாசத்தில், மாதம் ரூ.16,457 தவணை என்ற அடிப்படையில் ரூ.20,80,000 வீட்டுக்கடன் பெற்று வீடு கட்டியுள்ளார்.
இதையடுத்து சோமசுந்தரம் தவறாமல் தவணை செலுத்தி வந்த நிலையில், DHFL நிதி நிறுவனத்தை கடந்த 2022-ம் ஆண்டு PCHFL (PIRAMAL CAPITAL AND HOUSING FINANCE LIMITED) நிதி நிறுவனம் வாங்கியுள்ளது. இதையடுத்து மாற்றப்பட்ட நிர்வாகம் சோமசுந்தரத்தின் வீட்டுக் கடனை மறுசீரமைத்து மாதத் தவணையை ரூ.19,750 ஆக நிர்ணயித்துள்ளது. அதன்படி, மாதம் ரூ.19,750 தவணை செலுத்தி வந்துள்ளார் சோமசுந்தரம். மேலும், சொந்த நெருக்கடி காரணமாக கடந்த ஜனவரி மற்றும் மே மாதம் என இரு தவணைகள் மட்டும் கட்ட முடியாமல் போனது. கடைசியாக கடந்த அக்டோபர் மாதம் 8-ம் தேதி தவணை செலுத்தியுள்ளார்.
இந்நிலையில், தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் நான்கு பேர் கடந்த 8-ம் தேதி சோமசுந்தரத்தின் வீட்டிற்கு வந்து, வீட்டில் இருந்த பெண்களை அச்சுறுத்தும் வகையில் மிரட்டிப் பேசியதோடு, வீட்டுச் சுவரில் "PCHFL கடனில் உள்ளது" எனவும், சொத்து சுவாதீன அறிவிப்பு என்ற தலைப்பில் “தவணை கட்ட தவறியதால் தனியார் நிதி நிறுவனம் இந்த கட்டடத்தை சுவாதீனம் செய்யப்பட்டும்” என்று எச்சரிக்கை விடுத்த வாசகங்கள் அடங்கிய பிளக்ஸ் பேனரை வீட்டின் சுவற்றில் ஓட்டியுள்ளனர்.
மூன்று தவணைகளுக்காக தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் அராஜகம் செய்வதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சோமசுந்தரம், ஆன்லைனில் தனது வீட்டுக் கடன் குறித்து பார்த்தபோது அவருக்கு பேரிடி காத்திருந்தது. இதையடுத்து நிலைகுலைந்து போயுள்ளார் சோமசுந்தரம்.
இது குறித்து நம்மிடம் பேசிய போது... “30 வருட தவணையாக இருந்த எனது வீட்டுக்கடனை எனக்கு தெரியப்படுத்தாமலேயே 82 ஆண்டுகளுக்கு உயர்த்தியுள்ளனர். கடனாக வாங்கிய 20,80,000 ரூபாய்க்கு 82 ஆண்டுகளில் சுமார் ஒரு கோடியே என்பது லட்சம் கட்டும் வகையில் மாற்றி பின்னர் பலமுறை முறையிட்டு இப்போது 40 ஆண்டுகளாக மாற்றியுள்ளனர். மேலும் எனது மனைவி மற்றும் தாயாரிடம் அருவறுக்கத்தக்க வகையில் பேசி, அத்துமீறி எனது வீட்டில் நடந்து கொண்டுள்ளனர்” என வேதனையுடன் தெரிவித்தார்.