சுஜித்தின் உடல் 20 நிமிடங்களில் வெளியே எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித் உயிரிழந்தான். 80 மணி நேரத்திற்கு மேலாக மேற்கொள்ளப்பட்டு வந்த மீட்பு பணிகள் இறுதியில் தோல்வியில் முடிந்தன. பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டும், அடுத்தடுத்த பல தடைகளால் சுஜித்தை உயிரோடு மீட்க முடியாமல் போனது. குழந்தை இருந்த ஆழ்துளைக் கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து மருத்துவர்கள் சோதனை செய்ததில் உடல் அதிக அளவில் சிதைந்துவிட்டது என தெரிவிக்கப்பட்டது. அதனை அடுத்து சுஜித்தின் உடல் ஆழ்துளைக்கிணற்றில் இருந்து எடுக்கப்பட்டது.
ஆனால் உடல் எவ்வாறு எடுக்கப்பட்டது என்பது குறித்து தகவல்கள் வெளியிடப்படவில்லை. உடலை எடுக்கும் இடத்தில் முக்கிய அதிகாரிகள், மீட்புப் படை வீரர்கள் என 15 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். ஊடகங்கள், பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. உடல் மீட்கப்பட்டது குறித்து ஆங்கில நாளிதழ் தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி சுஜித்தின் உடலை மீட்க தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை, தீயணைப்பு வீரர்கள், மருத்துவர்கள் என 15 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
ஆழ்துளைக் கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து மருத்துவர்கள் குழு குழந்தையின் உயிரிழப்பை உறுதி செய்தனர். அப்போது தான், அருகில் குழி தோண்டப்பட்ட வேலை நிறுத்தப்பட்டது. பின்னர் பல ஆலோசனைகளுக்கு பிறகு 3 மணிக்கு உடலை வெளியே எடுக்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படைக்குழு ஈடுபட்டது. அவர்களின் கருவி மூலம் உடல் வெளியே எடுக்கப்பட்டது. உடலை வெளியே எடுக்கும் பணியில் தீயணைப்புத்துறையைச் சேர்ந்த வெங்கடேஷ் மற்றும் ரூபன் ஆகியோர் பணியாற்றினர். 88 அடியில் இருந்த சுஜித்தின் உடல் 20 நிமிடங்களில் வெளியே எடுக்கப்பட்டது.
இது குறித்து பேசிய திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, சுஜித் இறந்துவிட்டதை உறுதி செய்த பிறகே ரிக் இயந்திரத்தின் பணிகளை நாங்கள் நிறுத்தினோம். பின்னர் பேரிடர் மீட்புக்குழு, குழந்தையின் உடலை வெளியே எடுத்தனர். சுஜித்தை உயிருடன் மீட்டிருந்தால் நாங்கள் மகிழ்ச்சி அடைந்திருப்போம் என தெரிவித்தார்.