எத்தனையோ இயக்குநர்களுடன் ரஜினிகாந்த் நடித்திருந்தாலும், அவருக்குள் இருந்த கலைஞனை சரியாக வெளிக் கொண்டு வந்தவர் இயக்குநர் மகேந்திரன்.
ஒரு சிறந்த திரைப்படம் எடுக்க நினைக்கும் இன்றைய இளம் இயக்குநர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக திகழ்ந்து கொண்டிருப்பவர் இயக்குநர் மகேந்திரன். பை சைக்கிள் தீவ்ஸ், சில்ரன்ஸ் ஆஃப் ஹெவன் போன்ற வெளிநாட்டு படங்களை பார்த்து வியந்து கொண்டிருக்கும் இன்றைய உதவி இயக்குநர்கள், மகேந்தரனின் உதிரிப்பூக்கள் படத்தை பார்த்தால் நிச்சயம் சிலிர்த்து போவார்கள். மொத்தம் அவர் இயக்கிய திரைப்படங்கள் பன்னிரண்டு தான். ஆனால், அவற்றில் நெஞ்சத்தை கிள்ளாதே, மெட்டி, நண்டு, ஜானி, முள்ளும் மலரும் என பெரும்பாலான திரைப்படங்கள் காலத்தை கடந்து போற்றக் கூடியவை.
சுமார் 20க்கும் மேற்பட்ட படங்களுக்கு மேல் கதை, திரைக்கதை எழுதி முடித்த மகேந்திரனுக்கு இயக்குநராக முதல் படம் முள்ளும் மலரும். படத்தின் கதாநாயகன் ரஜினிகாந்த் என்பதையும் தாண்டி இசை இளையராஜா, ஒளிப்பதிவு பாலுமகேந்திரா என்பதுதான் மிகவும் முக்கியமான அம்சம். முதல் படமே மிகப்பெரிய வெற்றி. இசை ரீதியாகயும் வெற்றிப் படமாக அமைந்தது. இந்தப் படம் ரஜினிக்கும் முக்கியமான திருப்பு முனையாக அமைந்தது. தன்னுடைய 12 படங்களில் அதிகபட்சமாக ரஜினியை வைத்து மூன்று படங்களை இயக்கினார் மகேந்திரன்.
தமிழ் சினிமாவில் 1978ம் ஆண்டு ரஜினிகாந்திற்கு மிகவும் முக்கியமான வருடம். குணச்சித்திர நடிகர், துணை நடிகர், வில்லன் என்ற பரிணாமங்களில் வலம் வந்துகொண்டிருந்த அவர், முழுக்க ஹீரோவாக மாறியது அந்த வருடத்தில்தான். 1978இல் மட்டும் ரஜினி சுமார் 20 படங்களில் நடித்து இருந்தார். அதில், பைரவி, முள்ளும் மலரும், தப்பு தாளங்கள், தாய் மீது சத்தியம், ப்ரியா உள்ளிட்ட படங்கள் முக்கியமானவை என்று சொல்லலாம்.
ரஜினிக்கு மிகவும் திருப்பு முனையாக அமைந்தது முள்ளும் மலரும் திரைப்படம். ஆம், இத்தனை வருடங்கள் கடந்துவிட்டாலும் ஒரு சிறந்த நடிகராக ரஜினிக்கு பெயர் வாங்கிக் கொடுத்த படங்களில் முள்ளும் மலரும் முதல் இடத்தில் இருக்கிறது. படத்தில் ரஜினியுடைய யதார்த்தமான நடிப்பு அவ்வளவு அற்புதமாக இருக்கும்.
முள்ளும் மலரும் படத்தில் ரஜினி பேசிய ‘கெட்ட பய சார் இந்த காளி’ என்ற வசனம் இன்றளவும் பிரபலமாக உள்ளது. அதுவும், இறுதி காட்சியில் சரத் பாபுவை விட்டுவிட்டு அவரது தங்கை தன்னிடமே வரும் காட்சியில் ரஜினி என்ற நடிகர் உச்சத்தை தொட்டிருப்பார். கபாலி படம் வெளியாவதற்கு முன்பு இயக்குநர் ப.ரஞ்சித் அளித்த பேட்டி ஒன்றில், ‘முள்ளும் மலரும்’ ரஜினியை மீண்டும் பார்க்கலாம் என்று கூறியிருந்தார். அந்த அளவிற்கு ரஜினியின் நடிப்பிற்கு தீனி போட்ட படம்தான் முள்ளும் மலரும்.
முள்ளும் மலரும் படத்திற்கு பின் ஜானி, கை கொடுக்கும் கை ஆகிய இரண்டு படங்களில் ரஜினியும் மகேந்திரனும் இணைந்து பணியாற்றினார்கள். இதில், ஜானி படம் மிகவும் முக்கியமானது. அந்தப் படத்தில் ஸ்ரீதேவிக்கு இணையாக ரஜினி தன்னுடைய நடிப்பில் மிரட்டி இருப்பார்.
குறிப்பாக, ஸ்ரீதேவி தன்னுடைய காதலை சொல்லும் தருணத்தில், அதனை ஏற்கமுடியாமல் திணறும் காட்சிகள் அப்படி இருக்கும். அந்தக் காட்சியில் இருவருக்கும் இடையே காதல் அப்படி ததும்பி வழியும். ரஜினியும், ஸ்ரீதேவியும் இணைந்து எத்தனையோ படங்கள் நடித்திருந்தாலும் ஜானி நிச்சயம் அந்த பட்டியலில் ஸ்பெஷல்தான்.
நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் ரஜினி காந்தை, இயக்குநர் பாலசந்தர் கேள்விகள் கேட்டு பேட்டி எடுத்துக் கொண்டிருந்தார். அப்பொழுது உங்களுக்கு பிடித்த இயக்குநர் யார் என்ற கேள்வியை அவர் எழுப்பினார். அப்பொழுது, பலரும் நினைத்தது ரஜினியை பல படங்களில் நடிக்க வைத்தவர் பாலசந்தர், அதனால் அவர் பெயரினைதான் கூறுவார் என்று நினைத்தனர். ஏனெனில் தன்னுடைய குரு பாலசந்தர் என்று ரஜினியே பல முறை கூறியிருக்கிறார். ஆனால், அன்று அந்தப் பேட்டியில் ரஜினி சொன்ன பெயர் ‘மகேந்திரன்’.