“2 நொடிகளில் என்ன சிசு என சொல்கிறார்”.. கையும் களவுமாக பிடிபட்ட கும்பல்; அலற விட்ட அதிகாரிகள்!

பென்னாகரம் அருகே மலை அடிவாரத்தில் உள்ள வீட்டில், நடமாடும் ஸ்கேன் இயந்திரம் மூலம் கருவில் உள்ள சிசுவின் பாலினத்தை தெரிவித்த கும்பல் சிக்கியுள்ளது. இந்த கும்பல் கையும், களவுமாக சிக்கியது எப்படி?..விரிவாக பார்க்கலாம்...
அதிகாரிகள் சோதனை
அதிகாரிகள் சோதனைpt web
Published on

செய்தியாளர் விவேகானந்தன்

கொத்தாக சிக்கிய கருக்கலைப்பு கும்பல்

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த நெற்குந்தி முத்தப்பா நகரைச் சேர்ந்த லலிதா என்பவர், நத்தத்தள்ளி அரசு நடுநிலைப் பள்ளியில் சமையலராக பணியாற்றிவந்துள்ளார். இவர், கருக்கலைப்பு கும்பலுடன் தொடர்பு வைத்துக்கொண்டு கர்ப்பிணிகளை ரகசிய இடத்திற்கு அழைத்து வருவதாக ஊரக நலப்பணிகள் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து லலிதாவின் செல்போன் எண்ணுக்கு தொடர்புகொண்டு அதிகாரிகள் வாடிக்கையாளரைப்போல் பேசியுள்ளனர். தொடர்ந்து, சுகாதாரத்துறையில் பணியாற்றும் செவிலியர் ஒருவரை கருவில் உள்ள சிசுவின் பாலினம் கண்டறிவதற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அதன்படி, நெற்குந்தி அடுத்த முத்தப்பாநகரில் சிறிய மலைஅடிவாரத்தில் உள்ள தனி வீட்டில் சிசுவின் பாலினத்தை அறிய ஸ்கேன் செய்து கொண்டிருந்தபோதே, சம்பந்தப்பட்ட கும்பலை, ஊரக நலப்பணிகள் துறை இணை இயக்குநரான மருத்துவர் சாந்தி தலைமையிலான குழுவினர் கையும் களவுமாக பிடித்தனர்.

அதிகாரிகள் சோதனை
குஜராத்| பிரதமர் மோடியால் 2023-ல் திறக்கப்பட்ட விமான நிலையத்தின் மேற்கூரை பெயர்ந்துவிழுந்து விபத்து!

பெரிய நெட்வொர்க்கை வைத்துள்ளார்

கள்ளக்குறிச்சியை சேர்ந்த முருகேசன் என்பவர், ஒருவருக்கு 13 ஆயிரம் ரூபாய் பெற்றுக்கொண்டு 5 நிமிடத்தில் கருவின் பாலினத்தை கண்டறிந்து தெரிவித்தது விசாரணையில் தெரியவந்தது. முறையாக மருத்துவம் படிக்காத முருகேசன், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் போன்ற மாவட்டங்களுக்கு அவ்வப்போது சென்று ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிகளுக்கு கர்ப்பிணிகளை வரவழைத்து கருவில் உள்ள சிசுவின் பாலினம் கண்டறிந்து தெரிவித்து வந்ததும், கருவை கலைப்பதற்கு திருப்பத்தூருக்கு அனுப்பிவைத்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதுதொடர்பாக ஊரக நலப்பணிகள் துறையின் இணை இயக்குநர் மருத்துவர் சாந்தி கூறுகையில், “முருகேசன் தொடர்ந்து இந்த தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இவரிடம் சொகுசுகார் இருக்கிறது, ஸ்கேனிங் மிஷின் இருக்கிறது. பெரிய நெட்வொர்க்கை வைத்துள்ளார். ஓட்டுநர் அடியாள் என அனைத்தையும் வைத்துள்ளார். கர்ப்பிணிப்பெண்களை இங்கு அழைத்துவந்து, கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை சொல்கிறார்” என தெரிவித்தார்.

அதிகாரிகள் சோதனை
உலகக்கோப்பை: தென்னாப்பிரிக்காவும் மழையும்.... மறக்குமா நெஞ்சம் ரக நிகழ்வுகள்

அனைத்தும் பறிமுதல்

இதையடுத்து காவல்துறையினரை வரவழைத்த அதிகாரிகள், முருகேசன், இடைத்தரகர் லலிதா, முருகேசன் உடன் வந்த நடராஜன், கார் ஓட்டுநர் சின்ராஜ் ஆகிய நான்கு பேரையும் ஒப்படைத்தனர். அவர்களிடமிருந்து ஸ்கேன் இயந்திரம், சொகுசு கார், இருசக்கர வாகனம், பணம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

தற்போது கைதாகியுள்ள முருகேசன், இதே குற்றத்திற்காக சில மாதங்களுக்கு முன்பு கைதாகி ஜாமீனில் வெளிவந்துள்ளார். அப்போது நீதிமன்றத்தில் இனிமேல் இதுபோன்று செய்யமாட்டேன் என எழுத்துப்பூர்வமாக உத்தரவாதம் கொடுத்துவிட்டுவந்த நிலையில், தற்போது மீண்டும் அதே குற்றச்செயலில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது.

சட்டவிரோதமாக சிசுவின் பாலினத்தை கண்டறிதல், கருக்கலைப்பு செய்தல் உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் இதுபோன்ற நபர்களை, குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளருக்கு பரிந்துரைத்துள்ளதாக ஊரக நலப்பணிகள் துறை இணை இயக்குநர் மருத்துவர் சாந்தி தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com