காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் சனிப்பெயர்ச்சி விழா தொடங்கியுள்ளது. இதனையொட்டி ஏராளமான பக்தர்கள் அங்கு குவிந்துள்ளனர்.
விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு இன்று காலை 10.01 மணிக்கு சனிப்பெயர்ச்சி நடைபெறுகிறது. அதன்பின் சனி பகவான் இரண்டரை ஆண்டுகாலம் தனுசு ராசியில் சஞ்சாரம் செய்கிறார். இதனையொட்டி திருநள்ளாறு ஸ்ரீதர்பாரண்யேசுவரர் கோயிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர். சனிப்பெயர்ச்சியை ஒட்டி சிறப்பு பூஜைக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. திருநள்ளாறுக்கு வரும் பக்தர்கள் நளன் குளத்தில் குளிப்பது வழக்கம். நளன் குளத்தில் நீராடும் பக்தர்கள் தாங்கள் அணிந்திருக்கும் உடையை குளத்திலேயே விட்டுச் செல்வதால், சுகாதார பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, குளக்கரையில் உள்ள படிகளில் ஆடைகளை விட்டுச் செல்லலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விழாவிற்கான ஏற்பாடுகள் அனைத்தும் மாவட்ட நிர்வாகம் சார்பிலும் இந்து சமய அறநிலைய துறை சார்பிலும் செய்யபட்டுள்ளது. கண்காணிப்பு கேமரா ஆங்காங்கே பொருத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் வசதிக்காக குடிநீர், தங்குமிடம் மற்றும் பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.