செய்தியாளர்: என்.விஷ்ணுவர்த்தன்
நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு மீண்டும் கப்பல் போக்குவரத்து சேவை தொடங்குவதற்காக அந்தமானில் இருந்து கொண்டுவரப்பட்ட ‘சிவகங்கை’ என்ற பெயரிடப்பட்ட கப்பல் சென்னை வழியாக நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு கடந்த 6-ம் தேதி மாலை 5.30 மணிக்கு வந்து சேர்ந்தது.
இதைத்தொடர்ந்து நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு கப்பல் சேவை வரும் 15ம் தேதிக்கு பின்னர் தொடங்கப்படவுள்ளது. இந்நிலையில், நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இன்று சோதனை ஓட்டம் நடைபெற்றது.
பிரதமர் நரேந்திர மோடி கடந்தாண்டு தொடங்கி வைத்த இந்த கப்பல் சேவை, பலமுறை நிறுத்தப்பட்ட நிலையில், மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடங்க இருப்பது இருநாட்டை சேர்ந்த வணிகர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் இடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
‘சிவகங்கை’ என்ற பெயரிடப்பட்ட கப்பலில் சாதாரண வகுப்பில் 133 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு நபருக்கு ₹5 ஆயிரம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிரீமியம் வகுப்பில் 27 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், பயணிக்க ஒரு நபருக்கு ₹7,500 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த பயணிகள் கப்பலில் சாம்பார் சாதம், தயிர் சாதம், நூடுல்ஸ் உள்ளிட்ட துரித உணவுகளை கட்டணத்துடன் பெற்றுக்கொள்ள உணவக வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு நபர் 60 கிலோ வரை பார்சல் எடுத்துச் செல்லவும், 5 கிலோ வரை கைப்பையில் எடுத்துச் செல்லவும் அனுதிக்கப்பட்டுள்ளது. இந்த சோதனை ஓட்டம் முடிந்த பிறகு பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும் என்று கூறப்பட்டுள்ளது.